நான் முழுமையாய் பங்கேற்கும் முதல்படம்!!

கனவுத் தொழிற்சாலையின் கரையோரம் நின்று பார்த்த அனுபவம் நிறைய உண்டு. கஸ்தூரிமான் திரைப்படத்தில் நடித்து, “காமரா முன்னால் கூட நடிக்கத் தெரியாத அளவு நல்ல மனிதர்” என்று பெயர் வாங்கிய பெருமையும் உண்டு.

வேறு சூழல்களுக்கு எழுதிய பாடல்கள், “இன்னிசைக் காவலன்” திரைப்படத்திலும், பிறகு “கரிசல் மண்” என்ற படத்திலும் இடம்பெற்ற பிறகு திரை அனுபவம் ஏதும் பெரிதாய் ஏற்படவில்லை.

அது ஒரு தனி உலகம். அதற்கென்றே வாழ்க்கையை அர்ப்பணித்தவர்கள் பலர். திரைப்படத்துறையில் நுழைவதற்காக எந்த முயற்சியையும் மேற்கொள்ளாத நிலையில் அதைப்பற்றி அதிகம் பேசுவதே அதிகப்பிரசிங்கத்தனம் என்று அமைதியாய் இருந்துவிடுவேன்.

சில திரைப்படங்களுக்கான கதை விவாதங்களில் இயக்குநர்களுடனான நட்பின் அடிப்படையில் பங்கேற்றிருக்கிறேன்.

இந்தச் சூழலில் ஒரு மின்னஞ்சல். எல்.கே.ஜி எனப்படும் பாலர் வகுப்புமுதல் ஆறாம் வகுப்புவரை ஏ.எல்.ஜி மெட்ரிக்குலேஷன் பள்ளியில் என்னுடன் படித்த வகுப்புத் தோழன்.

அபுதாபியில் பெரிய நிறுவனம் ஒன்றில் இப்போது பெரிய பொறுப்பு. சமூக ஊடகங்கள் வழியே, என்னை அடையாளம் கண்டு, மின்னஞ்சல் தேடிப் பிடித்து பழைய நட்பை புதுப்பிக்கும் விதமாய் வந்த மின்மடல், பழைய நினைவு மின்னல்களை உருவாக்கியது.

சங்கரின் அடுத்த இந்தியப் பயணத்தில், எங்கள் அலுவலகத்தில் சந்தித்தோம். சங்கரின் பால்ய வயது நண்பரும் கோவையின் குறிப்பிடத்தக்க மருத்துவருமான திரு.சுரேஷ்பாபு உடன் வந்திருந்தார்.

சுரேஷ்பாபுவின் குடும்பத்தினர் திரைப்படத்துறையில் புகழ்மிக்க தயாரிப்பாளர்களாக விளங்குபவர்கள். சங்கருக்கும் சின்ன வயதிலிருந்தே சினிமாவில் தணியாத மோகம். இவர்கள் இணைந்து மேற்கொண்ட திரைப்பட முயற்சிகள் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை இந்தச் சந்திப்பில் தெரிந்து கொண்டேன்.

துணை முதல்வர் என்ற திரைப்படத்தை இவர்கள் தயாரித்திருந்தார்கள். சில வாரங்களுக்குப் பிறகு சங்கரிடமிருந்து ஒரு தொலைபேசி அழைப்பு.

“முத்து! அடுத்த படம் ஆரம்பிக்கிறேன். கதை என்னன்னு சொல்றேன். வசனம், பாட்டு எல்லாம் நீதான் எழுதறே! முதல்ல உன் பேங்க் அக்கவுண்ட் விபரங்கள் அனுப்பு. அட்வான்ஸ் அனுப்பணும்”.
பணம் வந்த வேகத்தில் கதையும் வந்தது. வாட்ஸப்பிலும், தொலைபேசியிலும் பலமுறை விவாதித்தோம்.
சமூக ஊடகங்களை, விழிப்புணர்வில்லாமல் கையாள்வதால் ஏற்படக்கூடிய விபரீதங்களை மையப்படுத்திய கதை அது.

வித்தியாசமான கதைக்களம். விறுவிறுப்பான திரைக்கதை. அத்தனைக் கோணங்களிலும் உள்வாங்கிக் கொண்டு திரைப்பட உரையாடல்களை எழுதத் தொடங்கினேன்.

ஒவ்வொரு காட்சியாய் மின்னஞ்சலில் அனுப்பி மிகவிரைவாகவே முழுவடிவம் கொடுத்தோம்.

சங்கரும், சுரேஷ§ம் முழு படத்தையும், எந்தப் பாத்திரங்களுக்கு யார் பொருந்துவார்கள் என்பதையும் அங்குலம் அங்குலமாய்த் திட்டமிட்டிருந்தார்கள்.

m இதற்கு முன்னரே, இவர்களின் படத்தில் நடித்தவர், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிப் படங்களில் முன்னணி நட்சத்திரமாகத் திகழும் ஸ்வேதாமேனன்.

அவரையும், கணேஷ்வெங்கட் ராமையும் முக்கியப் பாத்திரங்களாக ஒப்பந்தம் செய்திருந்தனர்.
குணா திரைப்படத்தின் பாடல்கள் வெளியான போது, பாடல்கள் உருவான முறையையும் விவாதித்திருப்பார்கள்.
“படம் ஹீரோவைச் சுத்திப்போகுதா ஹீரோயினைச் சுத்திப் போகுதா” என்று இசைஞானி இளையராஜா கேட்பார்.
“இணையதளம்” படம், பல முனைகளில் முக்கியப் பாத்திரங்களை முன்னிறுத்தும் பாடம்.. நாயக, நாயகிகளுக்கு இணை வைக்கக் கூடிய பாத்திரமாக, பன்முகத் திறமை கொண்ட ஒருவர் தேவைப்பட்டார்.

எனக்கு, அந்தப் பாத்திரத்திற்கு யார் மிகவும் பொருத்தம் என்று, உள்மனதில் தோன்றியதைச் சங்கரிடம் சொன்னேன்.

“சுகன்யா”

அதேபோல், படம் முழுவதும் ஆளுமை செலுத்தக்கூடிய இன்னொரு பாத்திரத்திற்கு சங்கர் ஏற்கெனவே ஈரோடு மகேஷைத் தேர்வு செய்திருந்தார்.

பல்லாண்டுகளாய் எத்தனையோ படங்களில் பணியாற்றி, அனுபவம் முதிர்ந்த கலைஞராய் பக்குவப்பட்டிருக்கும் கார்த்திக் ராஜா இந்தப் படத்தில் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் பலம்.

ஒய்.ஜி.மகேந்திரன், டெல்லி கணேஷ், படவா கோபி என்று ஒவ்வொரு நட்சத்திரமாய் அணிசேர, சமூகத்தின் இன்றைய மிக முக்கியச் சிக்கலைச் சூடும், சுவையுமாய் அலசும் “இணையதளம்” திரைப்படம் உருவாகத் தொடங்கியது.
அந்த உருவாக்கத்தில்தான் எத்தனை அனுபவங்கள்??…
(சொல்கிறேன்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *