நான் முழுதாய் பங்கேற்கும் முதல்படம்
இந்தப் படத்தின் தலைப்புப் பாடலை திரு.எஸ்.பி.பாலசுப்ரமணியம் பாடியிருக்கிறார் என்று கடந்த அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன். இணையம் என்னும் வசீகர வாய்ப்பு வானளவு வளர்வதற்கும் துணையாகிறது வேலையைக் கெடுத்து, பொழுது விரயமாக்கவும் காரணமாகிறது. இது அவரவர் மனப்பாங்கு சார்ந்தது.
எனவே, தலைப்புப் பாடலில், இணையத்தின் நிறைகளையும் குறைகளையும் சமமாகப் பட்டியலிட்டிருப்பேன்.
“சுருங்கிப் போனது பூகோளம்
சுறுசுறுப்பானது பூலோகம்
விரல்களின் நுனிகளில் வையகம் முழுவதும் அடங்கிவிடும்
அரசியல் சினிமா சங்கீதம்
அரட்டை அசிங்கம் ஆன்மீகம்
எல்லாம் எல்லாம் இங்கே ஒன்றாய் கலந்துவிடும்.
என்று தொடங்கும் பாடல் இது.
கலையின் பெரும்பான்மை படைப்புகள், “அறம் வெல்லும் பாவம் தோற்கும்” என்னும் அபிநாதத்தையே ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய் விதம்விதமாக வெளிப்படுத்தி விடுகின்றன.
அறமும் பாவமும் வாழ்க்கைச் சூழலால் விளைகிற எதிர்வினைகளேயன்றி வேறல்ல. அவரவருக்கு அவரவர் நியாயம் என்பதும் இந்த உணர்வுப் போராட்டத்தின் அங்கம்.
ஆனால் ஒரு செயல், சரியென்றும் தவறென்றும் சமமாகத் தோன்றுகிற வித்தியாசமான சூழல்கள் விளைவது எப்போதாவதுதான்.
அப்படியரு சூழலைப்பற்றிய அழகான சித்தரிப்புதான் “இணையதளம்” திரைப்படத்தின் கதை.
நிகழ்காலத்தின் நிதர்சனமான வாழ்க்கைப் போக்கு கதைக்களமாய் அமைந்ததால், சுவாரஸ்யமான காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன.
அந்தக் காட்சிகளுக்கான உரையாடல்களில் நிகழும் கணங்களின் பிம்பங்கள் காண்சிமிட்டும்.
அடுத்தவர்களின் அந்தரங்கத்தில் அத்துமீறுகிறோம் என்பதைக் கூட உணராமல், எல்லை மீறுதல் ஓர் அனிச்சைச் செயலாகவே ஆகிக் கொண்டிருக்கும் காலகட்டத்தின் அபாயங்கள் இந்தத் திரைப்படத்தில் மிகவும் துல்லியமாக விவாதிக்கப்பட்டுள்ளன.
அறிவியலும் தொழில் நுட்பங்களும் ஆகச் சிறந்த வரங்கள். ஆர்வக் கோளாறும் அதிக பிரசங்கித் தனமும் ஆபத்தான சாபங்கள். இந்தக் கூட்டுக் கலவையே பாட்டும் சிரிப்பும், பயமும் பரபரப்பும், பதட்டமும் பக்குவமும் சங்கமித்து இணையதளம் திரைப்படமாய் உருப்பெறுவதை அங்குலம் அங்குலமாய் அருகிருந்து காண முடிந்தது.
சின்னத்திரையில் சிகரம் தொட்டிருக்கும் இரண்டு இளைஞர்கள் இந்தத் திரைப்படத்தில் தனிமுத்திரை பதித்திருக்கிறார்கள். ஒருவர் திரு.ஈரோடு மகேஷ் இன்னொருவர், திரு.ஆடம்ஸ்.
ஆடம்ஸ் நடித்திருக்கும் பாத்திரம் திரையில் கொஞ்ச நேரம் வந்து போகக் கூடியது. திரையில் கொஞ்ச நேரம் வந்து போகக் கூடியது என்றாலும், படம் முடிந்து போகிற போதும் ரசிகர்களால் அவரை மறக்கமுடியாது.
ஈரோடு மகேஷ் படத்தின் கணிசமான பகுதியை கைப்பற்றியிருப்பதோடு, கலகலப்பு, கடமை உணர்ச்சி, கண் கலங்க வைப்பது, என்று கலவைப் பாத்திரமாய் கலக்கியிருக்கிறார்.
மிகவும் வித்தியாசமான சித்திரிப்பில் அசத்தும் சுகன்யா, நெருப்பில் நிற்கும் பாத்திரத்திலும் நிதானமாய் ஒளிரும் ஸ்வேதா மேனன் ஆகியோர் இது துருவங்களாய் விளங்குகிறார்கள்.
வசனங்களின் குரல் பதிவு நிகழ நிகழ, முதன்மைப் பாத்திரமான கணேஷ் வெங்கட்ராமின் பங்கு, மிகத் துல்லியமாய் வடிவம் பெற்றது. செயல் துடிப்பு மிக்க போலீஸ் அதிகாரியாய் நடித்துள்ளார்.
எஸ்.பி. பாத்திரத்தில் வரும் கோவை ரமேஷ்க்கு இது இரண்டாவது படம். இதற்குப் பிறகு இந்தத் தொழிலதிபருக்கு திரைப்படம் முழுநேரத் தொழில் ஆனாலும் வியப்பதற்கில்லை.
அவருடைய ஓட்டுநராய் நகைச்சுவைப் பாத்திரத்தில் வரும் நித்தின், உண்மையிலேயே ஓட்டுநர்தான் தாகமும் தவிப்பும் மிக்க இளைஞர். கொங்குப் பேச்சின் வீச்சு இவரை கவனிக்க வைக்கும்.
நல்ல சமூகச் சிந்தனையை, சுவாரசியம் குன்றாமல் சுகமாக சொல்லியிருக்கும் “இணையதளம்” திரைப்படம், எல்லா வகையிலும் முழுமை பெற்றிருப்பதற்கு, இயக்குநர்கள் சங்கர் & கணேஷ் ஆகியோரின் தீவிரமான திட்டமிடுதல் காரணம்.
அவர்களின் புதிய யோசனைகள், படப்பிடிப்பு நிகழும் போதே பாஞ்சாலியின் புடவைபோல் வளர்ந்து கொண்டே வந்தன.. வண்ணமயமாக!
(இன்னும் சொல்வேன்)