எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
“காபி சாப்பிடுகிறீர்களா?” இப்படிக் கேட்பது போல சாதாரணமாகத்தான் ஜெயமோகன் என்னிடம் கேட்டார், “சினிமாவில் நடிக்கிறீர்களா?” என்று. “ஓ! சாப்பிடலாமே!” என்பது போலத்தான் நானும் “ஓ! நடிக்கிறேன்!” என்று சொல்லிவிட்டேன்.
சென்னையில் ஆண்டு தவறாமல் நடக்கிற புத்தகக் கண்காட்சியால் பதிப்பாளர்கள் – படைப்பாளர்கள் – படிப்பாளர்கள் என்று முத்தரப்பினருக்கும் ஏக காலத்தில் பல நன்மைகள் அரங்கேறும். 2005ம் ஆண்டு புத்தக கண்காட்சியில் திரைப்பட உலகத்திற்கும் நடந்த பெரிய நன்மை(!) என்று மேற்கண்ட சம்பவத்தை வர்ணிக்கலாம்.
நல்ல நல்ல படைப்பாளர்களையும் அவர்களை விட நல்ல புத்தகங்களையும் ஒரு சேரப்பார்த்த சந்தோஷத்தில், கண்காட்சிக்குள் “பரபர”வென்று சுற்றிக் கொண்டிருந்த என்னை ஜெயமோகன் இழுத்துப் பிடித்து இந்தக் கேள்வியைக் கேட்டார். இந்த “மாபெரும் கலைச் சேவைக்கு” உடந்தையாய்யிருந்த பாவமும் புண்ணியமும் தமிழினி வசந்தகுமாருக்கும் உண்டு. பிரபல மலையாள இயக்குநர் லோகிததாஸ், மலையாளத்தில் முன்னரே வெளிவந்த தன்னுடைய “கஸ்தூரிமான்” படத்தைத் தமிழில் எடுக்கிறார் என்பதும், ஜெயமோகன் அதற்கு வசனம் எழுதுகிறார் என்பதும் அப்போது பரவலாகப் பேசப்பட்ட விஷயம் தான்.
“அந்தப்படத்தில் ஒரு பேராசிரியர் வேடம். அந்தப் பேராசிரியர் ஒரு பாதிரியார். கொஞ்சம் “துறுதுறு” பேர்வழி. வகுப்பில் பாட்டுப்பாடி ஆட்டம் ஆடி பாடம் எடுக்கிற மனிதர். அதற்கு நீங்கள் பொருத்தமாக இருப்பீர்களென்று நினைக்கிறேன். உங்களுக்கு நடிக்க விருப்பமுண்டென்றால் லோகியிடம் சொல்லுகிறேன்” என்றார் ஜெயமோகன்.
ஒப்புக்கொள்ளும்போதே ஒரு விஷயத்தை ரொம்பக் கறாராகச் சொல்லிவிட்டேன். “எனக்குப் பத்து லட்சம் ரூபாய் மட்டும்தான் கொடுக்க வேண்டும். அதற்குமேல் ஒருபைசா கொடுத்தாலும் வாங்கமாட்டேன்” என்று.
சில நிமிஷங்கள் தீர யோசித்து விட்டு ஜெயமோகன் சொன்னார். “உங்களை மாதிரி ஒரு பெரிய நடிகருக்கு இவ்வளவு கம்மியான தொகை கொடுக்க யூனிட்டிலே ஒத்துக்குவார்களா தெரியலை எதுக்கும் சொல்லிப்பார்க்கிறேன்”.
அப்புறம் என் புகைப்படங்கள் இயக்குநர் லோகிததாஸ§க்கு அனுப்பப்பட்டதும், அவர் அங்கீகரித்ததும் “மளமள”வென்று நடந்து முடிந்தன.
இயக்குநர் என் புகைப்படத்தைப் பார்த்து சம்மதித்துவிட்டார், நானும் அவர் புகைப்படத்தைப் பார்த்து சம்மதித்துவிட்டேன் என்கிற செய்தியை பிபிசி, சிஎன்என், ஸ்டார் உள்ளிட்ட தொலைக்காட்சிகளிலும் ஒளிப்பரப்பியிருப்பார்கள். நான்தான் சொல்ல மறந்து விட்டேன்.
அப்புறம் ஒருநாள் சொந்த வேலையாகச் சென்னையில் இருந்தபோது தொலைபேசி அழைப்பொன்று வந்தது. நான் கோவையில் இருப்பதாகக் கருதிக்கொண்டு, லோகிததாஸின் புரொடக்ஷன் மேனேஜர் பேசினார். “சாருக்கு நிங்களை காணணும் நாளை இவ்விடவருமோ”. “நாளைக் கெல்லாம் வரமுடியாது! இன்னும் அரைமணி நேரத்தில் தான் வரமுடியும்” என்று கண்டித்துச் சொல்லிவிட்டேன். என்னதான் சினிமா வாய்ப்பு தருகிறார்கள் என்றாலும் அதற்காக அவர்கள் சொல்கிற நேரத்தில் நாம் போக முடியுமா என்ன? அதற்கு முன்கூட்டியே போய்விட்டேன்.
கொஞ்சநேரக் காத்திருப்புக்குப் பிறகு இயக்குநர் உள்ளே அழைத்தார். படத்தின் கதாநாயகன் பிரசன்னாவும் அப்போது வந்திருந்தார். அவரிடம் பேசிக்கொண்டே அடிக்கடி என்னைப் பார்த்து சிரித்ததோடு சரி. நான் வந்திருப்பதால் ஹீரோ வாய்ப்பு பிரசன்னாவுக்குப் பறிபோய்விடக் கூடாதே என்று நான் பிரார்த்தனை செய்து கொண்டிருந்தபோது லோகிததாஸ் பிரசன்னாவுக்கு என்னை அறிமுகம் செய்து வைத்தார். “ஆ… பாதர் ரோலல்லே! ஈ புள்ளி” என்று ஏதோ சொன்னார்.
பார்த்ததுமே நான் பெரும்புள்ளி என்று அவர் புரிந்துகொண்டதை மெச்சிக் கொண்டேன். மலையாளத்தில் எல்லோருமே புள்ளிகள்தான் என்பது பிறகுதான் தெரிந்தது.
தேநீர் சாப்பிட்டுவிட்டுப் புறப்பட்டு வந்தேன். இந்த சம்பவம் நடந்து கொஞ்ச நாட்களிலேயே கவிப்பேரரசு வைரமுத்து தொலைபேசியில் அழைத்தார். “காப்பி சாப்பிடறீங்களா” என்கிற தொனியில் ஜெயமோகன் கேட்டது போலவே “அரியலூர் போறீங்களா” என்கிற மாதிரி வெகு சாதாரணமாக “அமெரிக்கா போறீங்களா” என்று கேட்டார் அவர்.
ஆச்சரியங்கள் அடுக்கடுக்காய் வந்தாலும் ஆச்சரியப்படுவதில்லை என்பதில் உறுதியாய் இருந்த நான் “அதற்கென்ன! போகலாமே!” என்றேன். அந்தப் பயணத்துக்கான சம்பிரதாயங்கள் இன்னொரு பக்கம் அரங்கேறிக் கொண்டிருந்தன. இதற்கிடையில் படப்பிடிப்பு ஆரம்பமாகிவிட்டதென்றும், இரண்டாவது ஷெட்யூலில் என் சம்பந்தப்பட்ட காட்சிகள் வரும் என்றும் ஜெயமோகன் சொன்னார்.
“ஜாக்கிரதை! நான் அமெரிக்கா கிளம்பிவிட்டால் என் கால்ஷீட் கிடைக்காது” என்று எச்சரித்தேன். “இல்லையில்லை! உங்கள் முழுஷீட்டும் வேண்டும்” என்றார் ஜெயமோகன்.