எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
ஜூன் மாதம் 2ம்தேதி, நான் அமெரிக்க விசாவுக்கான நேர்காணலில் பங்கேற்பது என்றும், ஜூன் மாதம் 4ம் தேதி, படப்பிடிப்பில் கலந்துகொள்வது என்றும், முப்பத்து முக்கோடி தேவர்களும், கின்னரர், கிம்புருடர் உள்ளிட்ட வானுலகத்தின் வேலையில்லாப் பட்டதாரிகளும் நமட்டுச் சிரிப்போடு நிர்ணயித்து இருந்தனர்.
சூதுவாது தெரியாத கிராமத்துப் பெண்ணை முதலிரவு அறைக்குத் தயார் செய்து அனுப்பும் முஸ்தீபுகளோடு என்னை விசா நேர்காணலுக்கு அனுப்ப ஏகப்பட்ட பேர் தயார் செய்து கொண்டு இருந்தனர்.
என்னிடம் ஒரு துளி பதட்டத்தையாவது ஏற்படுத்திவிடுவது என்கிற அவர்களின் முயற்சி தோல்விதான்.
ரொம்பப் பெரிய ஆசைகள் இல்லாததால் அவ்வளவு சீக்கிரம் எதற்கும் அலட்டிக் கொள்ளாதவன் என்று என் சுபாவத்தைப் பற்றி நான் அடிக்கடி அலட்டிக் கொள்வதுண்டு.
இரண்டாவது விஷயம், ஈஷாவில் சொல்லித் தரப்பட்டிருந்த ஒரு மனோபாவம். “நடந்ததா… நல்லது! நடக்கலையா… ரொம்ப நல்லது”.
“அமெரிக்க விசாவுக்காக படித்த பிச்சைக்காரர்கள் நீண்ட வரிசையிலே நிற்கிறார்கள்” என்று சில அரசியல் தலைவர்கள் மேடையில் பேசக் கேட்டிருக்கிறேன். அது அந்தக் காலம். இப்போதெல்லாம் இண்டர்நெட் வழியாக நேரம் பதிவு செய்து கொள்ளலாம். உங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்திற்குப் பத்து நிமிஷம் முன்பாகப் போனால் போதும்.
என் சுட்டுவிரல் ரேகைகளை இயந்திரமொன்றில் பதிவு செய்துகொண்ட அமெரிக்கர், என் விண்ணப்பத்தில் NEWS EDITOR என்று போட்டிருந்ததை எடுத்ததுமே பார்த்துவிட்டார்.
“CAN I SEE YOUR MAGAZINE SIR” (உங்கள் பத்திரிகையை நான் பார்க்கலாமா) என்று கேட்டதும், கையோடு கொண்டு போயிருந்த ‘நமது நம்பிக்கை’ இதழை எடுத்துக் கொடுத்து ஆங்கிலத்தில் அது பற்றிய கொள்கை விளக்கப் பேருரை நிகழ்த்தத் தொண்டையை செருமிக் கொண்டபோது அந்த அமெரிக்கர் அநியாயமாய் ஒரு வாசகம் சொன்னார். “என்கு தமீஈஈழ் தெர்யும்”. அவர் உச்சரித்த அழகு இன்னும் என் காதிலேயே இருக்கிறது. அமெரிக்கத் தூதரகத்தில் வேலை போனாலும் அவர் கவலைப்பட வேண்டாம். நம்மூர் தொலைக்காட்சிகளில் அறிவிப்பாளர் வேலையைத் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத் தருவார்கள்.
சொன்னதோடு விட்டாரா? “நமாது நம்பிக்காய்” என்று படித்து வேறு காட்டினார். “CAN YOU SHOW ME WHERE YOUR NAME APPEARS” (உங்கள் பெயர் பத்திரிக்கையில் எங்கே அச்சிடப்பட்டிருக்கிறது என்று காட்ட முடியுமா?) நான் முதல் பக்கத்தைப் பிரித்துக் காட்டியதுமே “அசீ…ரிய்யர்” என்று வாய் விட்டுப் படித்தார்.
ஒருவேளை அப்படித்தான் அச்சாகி இருக்கிறதோ என்று எனக்கே சந்தேகம், ஏனென்றால் எங்கள் அலுவலகத்தில் நாங்கள் எல்லோருமே புரூஃப் பார்ப்பதுண்டு. திருத்துவது தான் கிடையாது.
எனக்கு விசா கொடுப்பதென்று அந்த அமெரிக்கர் முடிவு செய்த நேரம் சுபயோக சுபமுகூர்த்தமா என்று தெரியாது. ஆனால், தமிழ் சினிமாக்களில் தாலிகட்டும் நேரத்தில் “நிறுத்துங்க” என்று சொல்வது போல் ஒரு சம்பவம் நடந்தது.
என்னுடைய பாஸ்போர்ட்டைப் புரட்டி வந்த அந்த அமெரிக்கர், சில பக்கங்களைப் பார்த்துத் திகைத்து, அகலமான புன்னகையோடு கேட்டார், “WHAT HAPPENED TO YOUR PASSPORT SIR” (உங்கள் பாஸ்போர்ட்டுக்கு என்னாயிற்று) அவர் காட்டிய பக்கங்களை உற்றுப்பார்த்துவிட்டு, அவரைவிட சில சென்டிமீட்டர்கள் அதிகமாகப் புன்னகைத்துவிட்டுச் சொன்னேன். THERE IS A SLIGHT DAMAGE (சற்றே பழுதடைந்துள்ளது).
இதற்கு முன் நான் மேற்கொண்ட அயல்நாட்டுப் பயணங்களுக்குப் பிறகு, பாஸ்போர்ட்டை என் மேசையில் வைத்திருந்தேன். என் மேசை மிகவும் ஆசாரமானது. “அயல்நாட்டுத் தீட்டோடு என்மேல் இதை வைக்கிறாயா” என்று கோபப்பட்டு, என் கையைக் கொண்டே தண்ணீர்க் குவளையைத் தட்டிவிட்டு, பாஸ்போர்ட்டை சுத்தப்படுத்தி ஏற்றுக் கொண்டது.
நானும், மொட்டைமாடியில் வத்தல் வடகம் காயப்போடுவது மாதிரி பாஸ்போர்ட்டை சிறிதுநேரம் காயவைத்து உள்ளே எடுத்து வைத்துவிட்டேன். இந்த சமாச்சாரத்தையும் என் பாஸ்போர்ட் பதிவு செய்திருப்பதை அந்த அமெரிக்கர் காட்டித்தான் தெரிந்துகொண்டேன். “காட்டுவித்தால் யாரொருவர் காணாதாரே! காண்பார் யார் அமெரிக்கர் காட்டாக்காலே”
அவர் ரொம்பப் பரிவாகச் சொன்னார் “உங்களுக்கு விசா கொடுப்பதென்று முடிவாகி விட்டது. ஆனால் இந்தப் பாஸ்போர்ட்டில் அதைப் பதிக்க முடியாது. புதிய பாஸ்போர்ட் எடுத்து அனுப்பி வையுங்கள். உங்களுக்கு விசா வந்து சேரும்”.
“அங்ஙனமே ஆகுக!” என்று சொல்லிவிட்டு கோவை திரும்புவதற்காகக் காலையில் பத்தரைக்கெல்லாம் விமான நிலையம் வந்தேன். விசா வரிசையில் என் பின்னால் நின்றிருந்த ஒருவர் அங்கே தட்டுப்பட்டார். ஆர்வமாக நெருங்கிக் கேட்டார் “விசா கிடைத்ததா?”
அவருக்கு பதில் சொன்னேன் “விசா கிடைத்து விட்டது. இனிமேல்தான் பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.” நான் கேலி செய்வதாக நினைத்துக் கொண்டு அவசரம் அவசரமாக தன் டிராலியைத் தள்ளிக்கொண்டு விலகிப்போய்விட்டார்.