எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
படப்பிடிப்புக்கு நான் போக வேண்டிய தேதிக்கு ஒருநாள் முன்னதாக மறுபடியும் ஓர் அலைபேசி அழைப்பு. இணை இயக்குனர் மோகன் பையானூர் பேசினார். “சார் மறக்காம மீசையை எடுத்துட்டு வரணும்”. இந்த விஷயத்தை அவர்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்திருந்தேன். பாதிரியார் வேடத்திற்காக மீசையை எடுக்க வேண்டும் என்று அவர்கள் முன்பே சொல்லியிருந்தார்கள். முளைத்த நாள் தொடங்கி மழித்திராத மீசையை இழக்க விருப்பமில்லை எனக்கு. ஏதேதோ பழமொழி எல்லாம் நினைவுக்கு வந்தது. பலநாட்கள் முன்பே மீசை தாடியுடன் உள்ள பாதிரியார்கள் புகைப்படங்களை எல்லாம் தேடிப்பிடித்து ஜெயமோகனிடம் கொடுத்துப் பார்த்தேன், அவர் எப்போதும் போல் “அப்படியா” என்று சிரித்துவிட்டு நகர்ந்து விட்டார்.
தப்பிக்க என்ன வழி? “உங்கள் படமோ கஸ்தூரிமான். நானோ கவரிமான். மீசையெல்லாம் எடுக்க முடியாது” என்று வசனம் பேசி நடிகராகும் முன்பே வேலை நிறுத்தம் செய்யலாமா என்று யோசித்தேன். இன்னொரு யோசனையும் வந்தது. “அடேடே! பாதிரியார் வேடமென்றா சென்னீர்கள்? நான் பாரதியார் வேடம் என்றல்லவா நினைத்தேன்” என்று தட்டிக் கழித்துவிடலாமா? செய்யலாம்தான். நிம்மதியாக வேறு நடிகரைப் போட்டு விடுவார்கள். கலையுலகத்திற்கல்லவா பேரிழப்பு!
சினிமாவுக்கும் ஆசை. மீசைக்கும் மோகம், “ஆசை அறுமின்கள்! ஆசை அறுமின்கள்” என்று திருமூலர் சொன்னதைக் கேட்கவில்லை. “மீசை எடு மின்கள்! மீசை எடுமின்கள்” என்று திரைப்படக்காரர்கள் சொன்னதைக் கேட்டேன்.
படப்பிடிப்புகாக மீசையை எடுக்க வேண்டும் என்கிற விஷயத்தை முன்பே வீட்டில் சொல்லி இருந்தேன். என் பத்து வயது மகள் வித்யார்த்திக்கு, எந்த விநாடியும் நான் மீசையை எடுத்து விடுவேன் என்கிற எதிர்பார்ப்பு. தினமும் இரவு தூங்கப் போகும் முன், “அப்பா! நான் எழுந்தப்புறம்தான் மீசையை எடுக்கணும்” என்று நிபந்தனை விதிப்பதும், நள்ளிரவில் அரைதூக்கத்தில், எனக்கு மீசை இருக்கிறதா என்று தடவிப் பார்ப்பதுமாய் இருந்தாள்.
காலையில் அவளை உலுக்கியும் எழுப்ப முடியாவிட்டால், என் மனைவி “எழுந்திரு! அப்பா மீசையை எடுக்கப் போறாங்க! “என்றதும் உடனே எழுந்துவிடுவாள். இப்படியாக என் மீசை விஷயம் ஒரு “விழிப்புணர்வை” ஏற்படுத்திக் கொண்டிருந்தது.
அந்த நாளும் வந்தது. ‘தில்லு முல்லு’ படத்தில் ரஜினிகாந்த் மீசையை எடுக்கும்போது கேசட்டில் நாதஸ்வரம் ஒலிக்கும். என்னிடமும் நாதஸ்வரக் கேசட் உண்டு. ஆனால் ஒரு சூப்பர் ஸ்டார் செய்ததை இன்னொரு சூப்பர் ஸ்டார் செய்யக் கூடாதல்லவா? ரீ ரிகார்டிங் இல்லாமலேயே மீசையை எடுத்தேன்.
மீசை இல்லாத் திருமுகத்தோடு படப்பிடிப்புக்குப் போயாகி விட்டது. போனதுமே பாதிரியார் அங்கியை மாட்டிக் கொண்டு அங்குமிங்கும் அலைந்து கொண்டு இருந்தேன். இயக்குநர் பார்த்து ‘நன்னாயிட்டிண்டு’ என்று சொல்லும் வரை கழற்றவில்லை. பிரசன்னா, மீராஜாஸ்மின் தொடர்பான மற்ற காட்சிகள் படமாகிக் கொண்டிருந்தன.