எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
மதியம் இரண்டுமணி. உதவி இயக்குநர் உதயன் என்னைத் தேடி வந்து “பட்சணம் கழிச்சோ” என்று அக்கறையுடன் விசாரித்தார். அவரது விருந்தோம்பலில் நெகிழ்ந்து போய் “கழிச்சு” என்று சொன்னதுமே கழுத்தில் கை வைக்காத குறையாய். “சாருக்கு மேக்கப் இடாம்” என்று தள்ளிக் கொண்டு போய்விட்டார்.
பத்தே நிமிடங்கள்தான். முத்தையாவைக் காணோம். ஃபாதர் டிக்ரூஸ் நின்று கொண்டிருந்தார். பொதுவாக நடிகர்களென்றால் நரையை மறைக்கக் கறுப்புச் சாயம் பூசுவார்கள். எனக்கோ நரை தடவி நடுத்தர வயதாய்க் காட்ட முயன்றார்கள். என்றாலும், என் இளமையை அந்தச் சாயத்தால் மறைக்க முடியாததை மேக்கப் மேனின் முகபாவனை உணர்த்தியது. எனக்குத் தற்புகழ்ச்சி பிடிக்காது என்பதால் இதை இங்கே குறிப்பிடவில்லை.
உதவி இயக்குநர்கள் அனைவருமே பரீட்சைக்குப் போகும் பையன்கள் மாதிரி கைகளில், பேப்பர் செருகிய அட்டைகளோடு அலைந்து கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரான மீரா கதிரவன் என்னிடம் வந்தார். “சார்! உங்களுக்கு முதல் சீனே பிரமாதமான சீன். வகுப்பிலே மரணம் பற்றிச் சொல்லிக்கிட்டிருக்கீங்க. அப்ப ஹீரோவுக்கு அப்பா விஷம் குடிச்ச செய்தி வருது” என்றார்.
“சை!” என்றாகிவிட்டது எனக்கு. மங்கலமான ஆரம்பம்! உடனே அவர் சளைக்காமல் பல முன்னணி ஹீரோக்களின் பெயர்களைச் சொல்லி “அவுங்களுக்கெல்லாம் கூட முதல் சீன் இப்படித்தான் இருந்தது” என்றார். சொல்லும்போதே அவர் தன் சிரிப்பை அடக்க சிரமப்படுவதைப் பார்த்து “சினிமாவில் இதெல்லாம் சகஜம்ப்பா” என்றது என் உள்மனது.
நல்ல வேளையாக இயக்குநருக்கு மனம் மாறிவிட்டது. மீரா ஜாஸ்மீன் தன் ஹீரோ ஹோண்டாவில் இருந்தபடியே யாரையோ பார்த்து “ஏனுங்கண்ணா! காதலிக்கறது தப்புங்களாண்ணா” என்று கேட்பார். அவருக்குப் பின்னாலிருந்து வருகிற நான், “நெவர்! காட் இஸ் லவ்!” என்று சொல்லிவிட்டு ஒரு பாட்டைப் பாடிக்கொண்டே போக வேண்டும்.
“இவ்வளவுதானே! பிய்த்து உதறிவிடலாம்!” என்று நினைத்துக் கொண்டு காமரா முன் நின்றேன்.
உதவி இயக்குநர் ஒருவர் ஓடிவந்து என் அங்கியைப் பிடித்து இழுத்தார். பதறிப் போய் விட்டேன். “சாரி” என்று சொல்லிவிட்டு என் பேண்ட்டின் நிறம், செருப்பின் நிறம், கைக்கடிகாரத்தின் நிறம் எல்லாவற்றையும் குறித்துக் கொண்டார்.
நிமிர்ந்து பார்க்கும் முன், ரோஜா படத்தில் அரவிந்த் சாமியை தீவிரவாதிகள் சுழ்ந்து கொள்வது மாதிரி ஏழெட்டுப் பேர் விதம்விதமான மாதிரி உபகரணங்களோடு என்னைச் சுற்றி நின்று கொண்டார்கள். இயக்குநர் காட்சியை விளக்குகிற போதே ஒருவர் காமிராவிலிருந்து என் காது வரைக்கும் டேப் வைத்து அளந்தார். இன்னும் சிலர் கையில் தெர்மாகோலை வைத்துக் கொண்டு என்னெதிரே குத்த வைத்து உங்கார்ந்தார்கள்.
ஒருவர் சாக்பீசால் கோடு கிழித்த கையோடு “சார்! நீங்க இங்கேருந்து வரணும். இங்கே நிக்கணும். இப்படி பார்த்து டயலாக் சொல்லணும். அப்படி போயிடணும்” என்றவுடன் தான் “ஆஹா! மாட்டிக் கொண்டோமே!” என்று தோன்றியது.
“இப்படி நடந்து வாங்க!” என்று சொல்வது வேறு. “முதல்ல இடதுகாலை எடுத்து வைங்க. அப்புறம் வலது கால். அதுக்கப்புறம் இடதுகால்” என்று நடப்பவரிடம் சொன்னால் அவருக்கு எது எந்தக்கால் என்பதே மறந்து போய்விடுமல்லவா!
அதுதான் நடந்தது. இரண்டு மூன்று ஒத்திகைகள். அந்த நேரத்திலும் என் கண்கள் ஜெயமோகனைத் தேடின. ஜெயமோகனிடம் ஓர் இயல்பு உண்டு. தீவிரமாக சிந்திக்கிறபோதோ, பதட்டமடைகிற போதோ மீசையை இழுத்து வைத்து பற்களால் கத்தரிப்பார். படப்பிடிப்பு பகுதியின் மூலையில், தன் மீசையை அசுர கதியில் கடித்துக் கொண்டிருந்தார். என் மீசையை எடுக்க வைத்த பாவியல்லவா? முற்பகல் நான் செய்தது, பிற்பகல் அவருக்கு விளைந்தது.
“அன்பே சிவம்” என்று எத்தனையோ மேடைகளில் பேசியிருக்கிறேன். மனசாரப் பேசியதில்லை போல. நான்கைந்து முறை “காட் இஸ் லவ்” என்று காமராமுன் சொன்ன பிறகுதான் கடவுள் விட்டார். கடவுள் நம்பிக்கை எனக்கிருப்பதைக் கடவுள் நம்புவதற்கு அவ்வளவு நேரமாகிவிட்டது.
காட்சி முடிந்து வந்ததும் பிரசன்னா சிரித்துக் கொண்டே சொன்னார். “டைரக்டரும் காமிராமேனும் “கட்! கட்”னு மாறி மாறி கதர்றாங்க. நீங்க அதெல்லாம் முடியாது. நடிச்சே தீருவேன்னு நடிச்சுத் தள்றீங்க!”
முதல் காட்சியே மீரா ஜாஸ்மீனுடன் என்கிற போது அவ்வளவு சீக்கிரம் “கட்” சொன்னால் எப்படி? இருந்தாலும் பிரசன்னாவுக்கு ரொம்பதான் பொறாமை என்று நினைத்தபடியே நகர்ந்து விட்டேன்.