எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
என் படப்பிடிப்பு அனுபவங்களை உடனுக்குடன் அறிந்துகொள்வதில் சக நடிகர் ஒருவர் மிகவும் ஆர்வமாக இருந்தார். யார் அந்த நடிகர் என்கிறீர்களா? மதுரைப் பேராசிரியர் டாக்டர்.கு.ஞானசம்பந்தன் தான் அவர்! நான் கஸ்தூரிமான் படத்தில் நடிக்கிறபோது அவர் ‘இதயத்திருடன்’ படத்தில் நடிக்கத் தொடங்கி இருந்தார். இது அவருக்கு இரண்டாவது படம்.
இதற்குமுன் ‘விருமாண்டி’ படத்தில், ஜல்லிக்கட்டுக்கு நேர்முக வர்ணணையாளராக வந்து “மாட்டுக்கு உடம்பு சரியிலையாம்யா” என்று பேசுவதைப் பார்த்திருப்பீர்கள்.
தொலைக்காட்சி, வானொலிகளுக்காக டாக்டர் ஞானசம்பந்தன் கோவில் கும்பாபிஷேகங்களுக்கு நேர்முக வர்ணணை செய்வதுண்டு. அந்த நேரங்களில் அவருக்கு விருமாண்டி படத்தின் வசனங்கள் ஞாபகம் வந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வாரோ என்று நான் யோசிப்பதுண்டு.
“அபிஷேகக் கலசம் வருதுய்யா விலகு! விலகு!” என்று வாய்தவறி சொல்லி விடவும் வாய்ப்பிருக்கிறதல்லவா?
“என்ன! இவ்வளவு தூரம் பழகி, கடைசியிலே கமலஹாசன் விருமாண்டியிலே உங்களைக் மாட்டுக்கு ஜோடியா நடிக்க வைச்சுட்டாரா” என்று நான் கிண்டல் செய்வது வழக்கம்.
அவர் தந்த சாபத்தாலோ என்னவோ, ஜோடியே இல்லாத பாதிரியார் வேடம்தான் எனக்கு வாய்த்தது.
“இதயத்திருடன் படத்தில் நீங்கள் நடித்த புகைப்படம் இருந்தால் அனுப்புங்களேன்! எங்க இதழில் என்று பேராசிரியரைக் கேட்டேன். “தரமாட்டாங்களே” என்று தயங்கினார்.
“ஏன்? இதயத்திருடன்ங்கிறதாலே படத்தையே எக்ஸ்ரே ஃபிலிமில் எடுக்கிறாங்களா?” என்று கேட்டேன். “ஆளைவிடுங்க” என்று தொலைபேசியை வைத்துவிட்டார்.
“இதயத்திருடன்” படத்தில் ஞானசம்பந்தன் நடிப்பதில் இன்னொரு பொருத்தமும் உண்டு. “உள்ளங்கவர் கள்வன்” என்று முதன்முதலில் பாடியவரே திருஞானசம்பந்தர்தானே! அப்படியரு சம்பந்தம் இருக்கத்தான் செய்கிறது.
‘கஸ்தூரிமான்’ படத்தில் எனக்கு ஜோடி இல்லையென்றா சொன்னேன்? ஒரே ஒரு இடத்தில் உண்டு. கல்லூரி வளாகத்திற்குள் எல்லோரும் வந்து கொண்டிருப்பதாக ஒரு காட்சி எடுக்கும்போது, என்னுடன் ஒரு கல்லூரி மாணவி பேசிக்கொண்டே வருவது போல அமைத்திருந்தார் இயக்குநர். மாணவியாக நடித்தவர் என்னிடம் பயபக்தியோடு “நீங்க எங்கே ஃபாதரா இருக்கீங்க-?” என்று வினவினார்.
“வீட்டிலேதான்! எனக்கொரு மகள் உண்டு!” என்று பதில் சொன்னேன். காட்சி முடிந்ததும் பிரசன்னா டைரக்டரிடம் வந்து கேட்டார். “சார்! ஒரு பையன், ஒரு பொண்ணுன்னு அனுப்பறீங்க! ஃபாதர் கூடவும் ஒரு பொண்ணு வர்றது நியாயமா”? என்று. எவ்வளவு பெருந்தன்மையாக ஹீரோ ரோலை நான் பிரசன்னாவுக்காக விட்டுக் கொடுத்திருக்கிறேன். இருந்தாலும் பாருங்கள்! போன அத்தியாயத்திலேயே சொன்னேன் அல்லவா? பிரசன்னாவுக்கு ரொம்பத்தான் பொறாமை என்று!!
படிப்பிடிப்புத் தளத்தில் எனக்கு சில சலுகைகள் இருந்தன. எல்லா நடிகர்களுமே காலை ஏழு மணிக்கெல்லாம் படிப்பிடிப்பு நடக்கும் இடத்திற்கு வந்து விடுவார்கள். படப்பிடிப்பு உள்ளூரிலேயே நடந்ததாலும், நான் பல ஜோலிக்காரன் என்பதாலும், நான் சம்பந்தப்பட்ட காட்சி வருவதற்கு முன்பாக உதவி இயக்குநர் ஒருவர் தொலைபேசியில் கூப்பிடுவார். சூடு பறக்கப் போய் நிற்பேன்.
அழைத்தால் அரைமணி நேரத்திற்குள் வந்து சேர்கிற ‘பீட்சா’ மாதிரி ஆகியிருந்தேன். அங்கியைமாட்டி, மேக்கப்பூசி, ஒரு மூன்றரை மணிநேரம் கழித்துக் காட்சியை எடுப்பார்கள். அதுவரை நான் சும்மா நின்று கொண்டிருப்பதைப் பார்த்து ஜெயமோகன் சொன்னார். “ஷ§ட்டிங் நடக்கிற இடத்திலே போயி, லோகி எப்படிச் சொல்லிக் கொடுக்கறாரு, நடிகர்கள்கிட்டே என்ன எதிர்பார்க்கிறாருன்னு பாருங்களேன்”.
நானும் போனேன். அங்கே எத்தனை நெருக்கமாய் நின்று பார்த்தாலும் இயக்குநர், அவரது உதவியாளர்கள், காமிராமேன் ஆகியோர் கூடிக்கூடி ‘குசுகுசு’வென்று பேசுவார்கள். ஓர் ஒத்திகை நடக்கும். மறுபடி ரகசியம் பேசுவார்கள். வேறேதும் சத்தியமாகப் புரியாது.
படப்பிடிப்பை விட, படப்பிடிப்பு ஏற்பாடுகளில் நடக்கிற விஷயங்கள்தான் வெகுசுவாரஸ்யமாக இருக்கும். அடுத்த காட்சியை அமைக்கப் பத்து நிமிடங்கள் ஆகுமென்று தெரிந்தால் போதும். மெல்லிதான குறட்டை சத்தம் கேட்கும். திரும்பிப் பார்த்தால், அதற்கு முந்தைய நிமிஷம் வரை நம்முடன் உரக்கப் பேசிக் கொண்டிருந்த உதவி இயக்குநர் ஒருவர் தன் உயரமான தேகத்தை ஓர் ஓரத்தில் மடித்து வைத்துக் கொண்டு தூங்கிப் போயிருப்பார்.
உற்சாக மிகுதியில் ஓர் உதவியாளர் “விழாமலே இருக்க முடியுமா” என்று பாடிக்கொண்டே வந்து வயர் தடுக்கி “தொபுக்கடீர்” என்று விழுந்ததெல்லாம் நிஜமாகவே நடந்தது.
முதல் ஒத்திகைக்கும் இரண்டாம் ஒத்திக்கைக்கும் நடுவில் இரண்டு நிமிட இடைவெளி கிடைத்தால் போதும். புரொடக்ஷன் கோபால், அந்தக் காட்சியில் சம்பந்தப்பட்டவர்களைத் தனியாக அழைத்துப்போய் ஒரு டம்பளர் மோர் கொடுத்து விடுவார். இயக்குநர் காட்சியை விவரித்துவிட்டு நகர்வதற்குள் டச்சப் முருகன் ஓடிவந்து நம் முகத்தை ஒத்தியெடுத்துவிட்டு மாயமாய் மறைந்து விடுவார். மாலையில் இயக்குநர் “பேக் அப்” என்று உச்சரித்து உதடு மூடும் முன்பே மசால்வடை விநியோகம் தொடங்கியிருக்கும்.