எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
“ஷிஃப்ட்” என்று சொல்லிப் பத்தாவது நிமிடம் அடுத்த இடத்தில் காமராமேன் ரத கஜ தூக பதாதிகளுடன் தன் முற்றுகையை முடித்திருப்பார்.
படப்பிடிப்புக் குழுவை “யூனிட்” என்று சொல்வது பொருத்தம்தான். அவ்வளவு ஒற்றுமை. அவ்வளவு ஒருங்கிணைப்பு. எந்த ஊரில்போய் இறங்கினாலும் அந்த ஊர்க்காரர்களுக்கே தெரியாத இடங்களில் போய் அபூர்வமான விஷயங்களை கொண்டுவந்து சேர்த்துவிடுவார்கள்.
முப்பது நாற்பது விஷயங்களை ஒரே நேரத்தில் நிர்வகிப்பது சர்வ சாதாரணமாக நடப்பதால்தானோ என்னவோ சினிமாக்காரர்களுக்கு ஆட்சியைப் பிடிப்பது அவ்வளவு எளிதாக இருக்கிறது.(நானும் இப்போது சினிமாக்காரன். நினைவிருக்கட்டும்)
தமிழ்ப் பேராசிரியராக நடித்ததால் அந்த வேடத்திலேயே ஒரு சவுகரியம் இருந்தது. அங்கியை மாட்டியதும் ஒரு தமிழ்ப் புத்தகத்தைக் கொண்டுவந்து கைகளில் கொடுத்துவிடுவார்கள். முந்தைய நாட்களில் என்ன புத்தகம் தந்தார்களோ, ‘கன்டினியுடி’ கருதி அதே புத்தகத்தைத்தான் தருவார்கள்.
எனவே நடிக்கக் கூப்பிடும் வரைக்கும் நிம்மதியாக படித்துக் கொண்டிருக்கலாம். இன்று ஆசிரியர்களைக் குற்றம் சொல்கிற கூட்டம் ஒன்று உண்டு. அவர்கள் சொல்கிற பொதுவான குற்றச்சாட்டு என்ன தெரியுமா? “ஆசிரியர்களில் பலர் வேலை கிடைத்தபிறகு படிப்பதை நிறுத்திவிடுகிறார்கள்” என்பதுதான். ஆசிரியராக வேஷம் கிடைத்தபோதே புத்தகம் படித்து அந்தப் பழியைத் துடைத்தவன் என்கிற பெருமை எனக்கிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள். நான் ரொம்பக் கூச்சத்தோடு அதை மறுக்கிறேன்.
படப்பிடிப்பு இடைவேளைகளில் சில நடிகைகள் சில ஆங்கில நாவல்களைக் கையில் தலைகீழாகப் பிடித்துக் கொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டிருக்கிறேன். படப்பிடிப்பில் எனக்குக் கொடுக்கப்பட்ட புத்தகம், வீராச்சிமங்கலம் கந்தசாமிக் கவிராயர் எழுதிய “வேளாளர் புராணம்”.
அந்தத் தலைப்பைப் பார்த்துவிட்டு, நான் வேண்டுமென்றே வீட்டிலிருந்தே கொண்டுவந்து விட்டதாக ஜெயமோகன் சந்தேகப்பட்டார். அது படப்பிடிப்பு நடக்கிற கல்லூரியிலிருந்து அவர்களாகவே கொடுத்த புத்தகம்தான் என்று நூலக முத்திரையை எல்லாம் காட்டிய பிறகுதான் நம்பினார்.
ஒருநாள், நீண்ட வசனக் காட்சி ஒன்றைப் பகுதி பகுதியாக எடுக்க வேண்டியிருந்தது. காமிராவுக்கு டிராலி போட்டு, ஆங்காங்கே விளக்குகள் பொருத்தி, யூனிட்டே பரபரப்பாக இருந்தது. டிராலிக்காரர் டிராலியில் அமர்ந்து இருந்தார். ஆங்காங்கே விளக்குகளை அணைத்து வைத்துவிட்டு எந்த நேரமும் காட்சி தொடங்கப் போகிறது என்று தயாராக இருந்தார்கள். அங்கிருந்த பதட்டம் கொஞ்சம் அசவுகரியமாக இருந்தது. யார் முகத்திலும் ஈயாடவில்லை. அந்த இறுக்கம் எனக்குள்ளும் பரவுவதைத் தவிர்க்க, கையிலிருந்த வேளாளர் புராணத்தை பிரித்தேன்.
“-ஐந்திரையின் திருமண ஏற்பாடுகளை விவரிக்கிற அழகான பாடல் ஒன்று கண்களில் பட்டது. அப்போது நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பு ஏற்பாடுகளை விவரிப்பது மாதிரியே அந்தப் பாடல் இருந்தது.
திருமண மண்டபத்தில் உண்மையான வாழை கமுகுகளை வைக்க வேண்டியதுதானே! மாறாக மரகதத்தில் செய்த வாழை, கமுகுகளை வைத்தார்களாம். முத்துப்பந்தல் அமைத்தார்களாம். கண்ணாடி நிரம்பிய மாளிகையெங்கும் தீபங்களை ஏற்றி வைத்ததும், கண்ணாடியில் பிம்பம்பட்டு, கண்ணாடிகளும் தீபங்களை ஏந்திக் கொண்டது போலத் தெரிந்ததாம்.
“மரகதத்தினால் வாழைகள், கமுகுகள் வகுத்து
தரளப் பந்தரில் விதானங்கள் தயங்குறச் சமைத்து
பரவப் பல்மணி தீபங்கள் பாங்குறப் பரப்ப
அருகில்த் தூங்கிய ஆடியும் எடுத்தது அவ்விளக்கை”
எவ்வளவு அலங்காரங்கள் செய்தும் என்ன? எல்லாம் அப்படியே இருந்தன. தீபங்கள் ஏற்றிய பிறகுதான் ஒரு களையே வந்தது. அருகில் தொங்கிய கண்ணாடிகள் கூட தீபங்களைப் பரபரப்புடன் ஏந்திக் கொண்டது போலத் தெரிந்தது என்கிறார் கவிராயர்.
“அருகில்த் தூங்கிய ஆடியும்” என்பது தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடியையும் குறிக்கும். அதுவரை தூங்கி வழிந்து கொண்டிருந்த கண்ணாடி என்கிற பொருளையும் கொடுக்கும். இந்தப் பாடலை அனுபவித்துக் கொண்டிருந்தபோது “லைட்ஸ்” என்று குரல் கேட்டது. காட்சி எடுக்கப் போவதாய் அர்த்தம். விளக்குகளுக்குப் பக்கத்தில் சோர்ந்து போய் அமர்ந்திருந்தவர்கள் “பரபர” வென்று அவற்றை ஒளிரச் செய்தார்கள்.
“அருகில்த் தூங்கிய ஆடியும் எடுத்தது அவ் விளக்கை”