எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
சில நாட்களுக்கு முன் நாஞ்சில்நாடன், தனக்கு வந்த விசித்திரமான ஒரு கனவைப் பற்றிச் சொன்னார். “சாகித்ய அகாதெமி விருதை அப்துல்கலாம் அறிவிக்கிறாருங்க! அதுவும் விஜயா பதிப்பகம் வேலாயுதம் அண்ணாச்சிக்கு! இதென்ன இப்படி ஒரு கனவு” என்றார். சுந்தர ராமிசாமிக்கு விஜயா பதிப்பகம் நிகழ்த்திய அஞ்சலிக் கூட்டம், அதில் விவாதிக்கப்பட்ட சாக்திய அகாதெமி விவகாரம், அப்துல்கலாமிடம் வேலாயுதம் அண்ணாச்சி பரிசு பெற்றது என்று வெவ்வேறு விஷயங்களை நாஞ்சில் நாடனின் ஆழ்மனம் மிக்ஸியில் போட்டு ஒன்றாகக் கலக்கியதில் விளைந்த கனவு இது என்று நினைத்துக் கொண்டேன். “பாவம்! ரொம்பக் குழம்பியிருக்கிறார் போல” என்று அனுதாபப்பட்ட என் மீதும் கனவுக்கான கடவுளின் கண்கள் பதிந்துவிட்டன.
ஒருநாள் அதிகாலையில் ஒரு கனவு. நாஞ்சில் நாடன் என்னிடம் “தெரியுமா? ஜெயமோகன் தி.மு.க&விலே சேர்ந்துவிட்டார்” என்று சொல்வதாக… “ஜெயமோகன் சினிமாவில் நுழைந்துவிட்டார்! அடுத்தது அரசியல்தான்” என்று யாரோ விளையாட்டாகச் சொன்னது ஆழ்மனதில் ஆழப்பதிந்ததன் விளைவுதான் இது.
இப்படி கனவுகளைப் பற்றிச் சொல்வதற்கும் ஒரு காரணம் உண்டு. சினிமாவில் நடிப்பேன் என்று நான் கனவுகூடக் கண்டதில்லை என்பது உண்மை தான். ஆனால், படப்பிடிப்பெல்லாம் முடிந்து கொஞ்ச நாட்களுக்குப் பின் இரவு நல்ல உறக்கத்தில், மூக்கில் அரித்தது. தன்னிச்சையாக கை மூக்குக்குப் போனது. “மூக்கில் கை வைத்தால் மேக்கப் கலைந்து விடும்” என்கிற எச்சரிக்கை மூளையில் ஓட, விழிப்புத் தட்டியது. சில நாட்கள் அனுபவமே இவ்வளவு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தினால் நடிப்புத் துறையிலேயே இருப்பவர்கள் பற்றிக் கேட்கவே வேண்டாம்.
இன்னொரு விஷயம். சினிமா நடிகைகள் என் கனவில் வந்ததில்லை என்றாலும் அந்தந்த வயதில் சில நடிகைகளைப் பிடிக்கும். பள்ளிப் பருவத்தில், அப்போது மீசைகூட முளைக்காதிருந்த என் மிக நெருங்கிய நண்பனின் ஜாடையில் இருந்ததால் நளினியைப் பிடிக்கும்.
என் அபிமானத்துக்குரிய நடிகைகளின் பெயர்களைச் சொன்னால் சில தலைவர்கள் கோபித்துக் கொள்வார்கள். என் கனவில் நடிகைகள் வருவதில்லை என்பதாலேயே அவர்கள் கனவுகளிலும் நான் போவதில்லை. “மதியாதார் தலைவாசல் மிதியாதே” என்று கே.பி.சுந்தராம்பாள் சொல்லி இருக்கிறார் அல்லவா? சமீபத்தில் என் அபிமானத்திற்குரிய ஒரு நடிகையின் வீட்டில் வருமானவரி ரெய்டு நடந்ததாக செய்தி வந்தது. உடனே ஜெயமோகனுக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பினேன். “அந்த நடிகையின் வீட்டை சோதனை போட்ட அதிகாரிகள் வியந்து போனார்கள். நடிகையின் கைப்பை, லாக்கர் என்று எல்லா இடங்களிலும் என் புகைப்படம் இருந்ததாம்” என்று.
இரண்டே நிமிடங்களில் ஜெயமோகனிடம் இருந்து பதில் செய்தி வந்தது. “அவர் உங்கள் படத்தை ஏதாவது வாஸ்து காரணங்களுக்காக வைத்திருப்பார்” என்று. தேவையா எனக்கு? “சரி! சரி! இப்படியெல்லாம் நேரத்தை வீண் பண்ணாம போய் கொற்றவை நாவலை எழுதி முடிங்க” என்று சொல்லிவிட்டேன்.