எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…

இதற்கு மேல் நடிகைகள் பற்றி நான் அதிகம் யோசித்ததில்லை. ஆனால், சக நடிகர்களை, குறிப்பாக என்னைப் போன்ற புது நடிகர்களை ஊக்குவிப்பதில், உற்சாகப்படுத்தி காட்சியில் ஈடுபடுத்துவதில் மீரா ஜாஸ்மின் என்னை அசத்திவிட்டார்.

இந்த அத்தியாயத்திற்குக் கூட “பக்த மீரா” என்று தலைப்பு தந்திருக்க வேண்டும். தொழிலில் அவருக்கு அவ்வளவு பக்தி. முதல் காட்சியில் அவரோடு நடித்தது பற்றி ஏற்கனவே எழுதியிருந்தேன். காட்சி முடிந்ததும் என்னை அழைத்து “நீங்க ரிகர்சலிலே செய்தது கூட ரொம்ப நல்லா இருந்தது. காமிரா முன்னாலே நிக்கிற போது தடுமாற்றம் வர்றது இயற்கை. பாருங்க! இப்ப கூட எனக்கு டென்ஷனிலே கை நடுங்குது. அது எப்பவும் இருக்கும்” என்று தன் உள்ளங்கையை விரித்துக் காட்டினார் மீரா.

படிப்பிடிப்புத் தளத்தில் உட்கார்ந்திருந்த போது ஒரு கன்யாஸ்திரி வந்ததும் பணிவோடு எழுந்து வணக்கம் சொன்னார் மீரா. கன்யாஸ்திரியும் முதலில் திகைத்துவிட்டு, பிறகு கம்பீரமாக நலம் விசாரித்து விட்டு நகர்ந்தார். அவர் படப்பிடிப்புக்காக கன்யாஸ்திரி வேடத்தில் வந்தவர் என்று அப்புறம் தான் தெரிந்தது.

படத்தில் ஒரு காட்சி. மீரா ஜாஸ்மினின் உடையைப் பார்த்துவிட்டு கல்லூரி முதல்வர், நம் பாரம்பரிய உடையணிந்து வரவேண்டும் என்று திட்டிவிடுகிறார். (இந்த வேடத்தில் நடித்தவர் பாடகி டி.கே.கலா. எதிர்காலத்தில் ஏதாவதொரு படத்தில் பல்கலைக் கழகத் துணைவேந்தராக வந்து இதே வசனத்தை அவர் பேசட்டும்.)

மறுநாள் பின்கொசுவம் வைத்த சேலையும், ரவிக்கையும், கொண்டை நிறையக் கனகாம்பரமும், மல்லிகையும், வாய்நிறைய வெற்றிலையுமாய் மீரா வருகிறார். அவரோடு மாணவ மாணவிகள் ஆடிப் பாடிக் கொண்டே வருகிறார்கள். எதிரே வருகிற தமிழ்ப் பேராசிரியராகிய நான் ஒரு விநாடி வியந்து பார்த்து விட்டு, பிறகு அவர்களுடன் சேர்ந்து ஆடிக் கொண்டே போய்விட வேண்டும்.

இந்தக் காட்சியை விளக்கியதும் கொஞ்சம் யோசித்தேன். உல்லாசச் சுற்றுலாவில் பேராசிரியர் ஆடினால் வேறு விஷயம். கல்லூரிக்குள் ஆடுவது போலக் காட்டினால் ஒப்புக் கொள்வார்களா என்று யோசிக்க ஆரம்பித்து விட்டேன்.

நான் தயங்கியதைப் பார்த்து இயக்குநர் “வேண்டுமானால் இவரைத் தனியாக ஆடவைத்து பிறகு இணைத்துக் கொள்ளலாம்” என்று முடிவெடுக்கப் போனபோது “ஒரு நிமிஷம்” என்று என்னைத் தனியாக அழைத்தார் மீரா.

“இந்த சீனிலே நீங்க சேர்ந்து ஆடினா நல்லாயிருக்கும். தனியா எடுத்து சேர்த்தா சரியாவராது. வாங்க! நான் ஸ்டெப்ஸ் சொல்லித்தரேன்” என்று ஐந்தே நிமிடங்களில் என்னைத் தயார்ப்படுத்திவிட்டார்.

எனக்குத் தனியாக வைக்கப்பட்ட குளோஸ்அப் காட்சிகள் ஒன்றிரண்டில் தடுமாறியபோது, “நான் காமிரா பக்கத்துல நிக்கறேன். நான் செய்யறதைப் பார்த்து அதே மாதிரி செய்யுங்க போதும்” என்று மீரா உற்சாகப்படுத்தி நடிக்க வைத்ததை மறக்கவே முடியாது.
தேசிய விருது வாங்கிய நடிகை என்கிற கர்வம் துளியும் காணப்படவில்லை அவரிடம். என்னை மட்டுமல்ல. சக நடிகர்கள், மாணவர் குழுவாகப் பங்கேற்கும் நடிகர்கள், அத்தனை பேரிடமும் அதே அக்கறையை அவர் காட்டினார்.

மீரா ஜாஸ்மின் ஸ்கூட்டி பழுதாகி நிற்க, டி.வி.எஸ்.50&யில் வருகிற நான் வண்டியை நிறுத்தி கொஞ்ச நேரம் பேசிவிட்டு போவதாக ஒரு காட்சி. படத்தில் நான் பேசிய நீளமான வசனம் அந்தக் காட்சியில்தான். அதன் ஒத்திகை முடிந்ததுமே இயக்குநர் முகம் மலர்ந்துவிட்டது. சின்முத்திரை பிடித்து “நல்லாயிருக்கு” என்று ஒளிப்பதிவுக்குத் தயாராகிவிட்டார்.

ஒரே டேக்கில் அந்தக் காட்சி எடுக்கப்பட்டதற்குக் காரணம், ஒத்திகைக்கு முன் மீரா ஜாஸ்மின் கொடுத்த உற்சாகம்தான். எந்த இடத்தில் நான் டி.வி.எஸ்.50 யைத் திருப்ப வேண்டும், எங்கே நிறுத்த வேண்டும் என்று ஓடி ஓடி, காலால் கோடு கிழித்துக் காட்டி, “சார்! நீங்க டைரக்டரைப் பார்க்கவே பார்க்காதீங்க! நம்ம ரெண்டு பேருக்குதான் இந்த சீன். உற்சாகமா பண்ணுங்க!” என்று அவர் சொன்னதில் இருந்த தீவிரம் அந்தக் காட்சியில் எனக்கு உத்வேகம் கொடுத்தது.

என் அமெரிக்கப் பயணம் முடிந்து. ஓரிரு காட்சிகளுக்காக மறுபடியும் படப்பிடிப்பிற்கு ஊட்டி வரச் சொல்லியிருந்தார்கள். ஏதோ ஒரு குழப்பத்தில் இருந்தார் மீரா. வழக்கமான கலகலப்பு குறைந்தது போல் இருந்தது. நான் சம்பந்தப்பட்ட காட்சிகள் முடிந்ததும் அவரிடம் தனிப்பட்ட முறையில் விடை பெற்றுக் கொள்ளச் சென்றேன்.

ஏதோ சிந்தனையில் இருந்தவர் எழுந்து நின்று முகமலர்ச்சியோடு விடை கொடுத்தார்.

அப்போது சொன்னேனோ இல்லையோ இப்போது சொல்கிறேன்…

THANKS MEERA!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *