எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
பஸ் காட்சிகள், பாடல் காட்சிகள் என்று படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. இதற்கு நடுவே என் அமெரிக்கப் பயணத்திற்கான தேதி வேறு நெருங்கியிருந்தது. விசா கிடைத்தும் பாஸ்போர்ட் கிடைக்காத விசித்திரமான சூழ்நிலையை முதல் அத்தியாயத்திலேயே சொல்லியிருந்தேன். யோசித்துப் பார்த்த போது அந்த நேரத்தில் பலருக்கும் பலவிதமான விஷயங்கள் கிடைத்தும் கிடைக்காமல் தான் இருந்தது.
படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்து வாய்ப்புக் கேட்ட சிலருக்கு படத்தில் வேஷம் கிடைத்தது. ஆனால் தங்கள் முகத்தைக் காட்டுகிற வாய்ப்பு கிடைக்கவில்லை. சிலர் காலையில் வந்து மேக்கப் போட்டுக் கொண்டு காத்திருக்கத் தொடங்கி மாலையில் பேக்கப் சொன்னதும் மேக்கப் கலைத்து விட்டுப் போய்விடுவார்கள்.
இன்னும் சிலர் காட்சிக்கு அழைத்தவுடன் மேக்கப் போட்டுக் கொள்ளலாம் என்று மேக்கப் அறையிலிருந்து பெஞ்சுகளில் படுத்துத் தூங்குவார்கள். உணவு நேரத்திலும் புறப்படுகிற நேரத்திலும் யாராவது எழுப்பி விடுவார்கள். அவர்கள் உதவி இயக்குநர்கள் முன்னால் போய் நின்றதும் “இன்று போய் நாளை வா” என்று விடை கொடுத்து அனுப்பப்படுவார்கள்.
கஸ்தூரிமான் படத்தில் என்னை பெண்டு நிமிர்த்திய காட்சி, ஒரு பாடல் காட்சி. இத்தனைக்கும் “மனதில் உறுதி வேண்டும்” என்ற நான்கு வரிகள்தான். நடன இயக்குநர் எதிர்பார்ப்பு என்னவென்று புரிபடுவதற்குக் கொஞ்சம் நேரமானது. அவரோடு எனக்குச் சின்ன உரசலும் ஏற்பட்டது. ஆனால் அவர் மிக அருமையான மனிதர் என்பது பழகிய பின்னால் தெரிந்தது. ஒவ்வோர் ஒத்தியிகையின் போதும் பாரதியார் என்னைப் பார்த்து “மனதில் உறுதி வேண்டும்” என்று பாடிக் கொண்டிருந்தார். அந்த ஷெட்யூலின் கடைசிநாள் படப்பிடிப்பு முடிந்தபோது ஜூன் 13ம் தேதி காலை ஐந்து மணி. “அப்பாடா!” என்கிற எண்ணம் இயக்குநருக்கு வந்ததோ இல்லையோ எனக்கு வந்தது. “ஒரு வழியா விடுதலை” என்று மனதாரச் சொல்ல முடியவில்லை. ஏன் தெரியுமா? அன்று எனக்குத் திருமண நாள். அன்றிலிருந்து 16வது நாள் நான் அமெரிக்காவுக்கு விமானம் ஏறவேண்டும்.