எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
இரவு ஏழு மணி வெய்யிலில் களைத்துப் போய் காரில் ஏறினோம். ஜப்பானிய உணவகம் ஒன்றிற்குப் போகலாம் என்றார் சந்தானம். அங்கே முற்றிலும் புதியதோர் அனுபவம் எங்களுக்கு.
உணவு மேசையை ஒட்டியே அடுப்பு அமைந்து இருக்கிறது. பணிப்பெண் ஒருவர் நமக்குத் தேவையான உணவு வகைகளைக் குறிப்பெடுத்துக் கொண்டு போனார்.
சில நிமிடங்கள் கழித்து “ஹாய்” என்ற கூச்சலுடன் ஒரு சிறுவண்டியைத் தள்ளிக் கொண்டு வந்தார் ஜப்பானியர் ஒருவர். வண்டியில் பச்சை மாமிசம், பச்சைக் காய்கறிகள், மீன் துண்டங்கள், என்று எல்லா உணவுப் பொருட்களும் இருந்தன.
நாம் கேட்ட உணவு நம் கண்முன்னே தயாரானது. வந்திருப்பவர் சமையல்காரரா சர்க்கஸ் காரரா என்கிற சந்தேகம் ஏற்பட்டது. தலைக்கு மேல் கத்தியைச் சுழற்றுவதும், காய்கறிகளைத் தூக்கிப் போட்டு வெட்டுவதும், மீன் வாலை லாவகமாய் வெட்டித் தனது தொப்பியில் ஏந்துவதும் என்று ஏக களேபரம். பெரிய வெங்காயத்தை நறுக்கி ஒன்றின் மேல் ஒன்றாய் அடுக்கி நடுவில் எண்ணெய் ஊற்றிக் கொளுத்தியதும் பெரியதாக ஜ்வாலை எழுந்தது. நாம் பதறிப்போய் பார்ப்பதற்குள் நெருப்பை அணைத்துப் புகை மண்டலமாக்கி, வெங்காய கோபுரத்தை “கூ.. சிக்புக் சிக்புக்” என்று ரயில் போல நகர்த்தியவர் நிமிட நேரத்திற்குள் அதை நறுக்கி வதக்கத் தொடங்கிவிட்டார்.
எள்ளும் இறைச்சியும் கலந்த சுவையான சாதம் மின்னல் வேகத்தில் தயாரானது. இறந்து போன கோழிக்கு எள்ளும் தண்ணீரும் இறைத்து இறுதிச் சடங்கு செய்கிறார் என்று எங்களுக்குள் பேசிக் கொண்டோம்.
இந்த உணவு மேசையில், டாக்டர். கு.ஞானசம்பந்தன் பற்றிய சுவையான தகவல்களை, அவரது கல்லூரிப் பருவ நண்பரான திரு.ராமகிருஷ்ணன் எனும் ராம்கி பரிமாறினார். டாக்டர்.கு.ஞானசம்பந்தன் போடும் நாடகங்களில் எல்லாம் “ஸ்த்ரீபார்ட்” வேடம் போடுபவராம் ராம்கி. கடல் கடந்து போய்த் தன் கதாநாயகியை மீண்டும் கண்டுபிடித்திருக்கிறார் பேராசிரியர்.
டாக்டர் ஞானசம்பந்தனின் இன்னொரு பெயர் “அங்குச்சாமி” என்பதும், அவரை நண்பர்கள் “அங்கு” “அங்கு” என்று அழைப்பார்கள் என்பதும், அங்கு போய்த்தான் தெரிந்தது. விடுதிக்குத் திரும்பியபோது, அங்கிருக்கும் அரங்கங்களில் ஒன்று, ஓர் ஒத்திகைக்காகப் பதிவு செய்யப்பட்டிருந்தது. திருமண ஒத்திகை!!
ஆமாம்! அமெரிக்கர்கள் திருமணம் நடைபெறுகிறதென்றால் முன்னதாகவே அரங்கை வாடகைக்கு எடுத்து, திருமணத்தை ஒத்திகை பார்க்கிறார்கள். மணமகன், மணமகள், அவர்களுடைய பெற்றோர், எல்லோருமே வருகிறார்கள். சில திருமணங்களில் பாதிரியாரும் ஒத்திகைக்கு வருகிறார்.
நம்மூரில் உறவினர்களை உப்பு ஜவுளிக்கு அழைப்பது போல் ஒத்திகைக்கு உறவினர்களை அழைக்கிறார்கள்.
மணமகனின் பெற்றோர் எங்கே அமர வேண்டும். மணமகளின் பெற்றோர் எங்கே அமர வேண்டும், மணமகனும் மணமகளும் எத்தனை அடிகள் எடுத்து வைத்து வரவேண்டும் என்பது உட்பட ஏகப்பட்ட விஷயங்கள் ஒத்திகை பார்க்கப்படுகின்றன.
இத்தனைக்கும் திருமணங்களுக்கு எத்தனை பேர் வருகிறார்கள் தெரியுமா? ஐம்பது பேர்! நூறு பேர் அழைக்கப்பட்டால் அது பெரிய கல்யாணம்! இதற்குப் போய் இவ்வளவு தூரம் விழுந்து விழுந்து ஒத்திகை பார்க்கிறார்கள் பாவம்.
நம்மைப் போல் ஆயிரக்கணக்கானவர்களை அழைத்து, கடைசி நேரத்தில் சில சமயம் மாங்கல்யத்தையும், சில சமயங்களில் மாப்பிள்ளையையும் தேடுகிற கலாட்டா கல்யாணத்தின் சுவாரசியம் அந்த ஒத்திகைக் கல்யாணங்களில் வருமா என்ன?