எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
ஜீலை-4 டல்லாஸ் மாநாட்டின் நிறைவு தினம். அன்றுதான் அமெரிக்காவின் சுதந்திரதினம். மாநாட்டின் நிறைவாக நடைபெற்ற கலந்துரையாடலின் கருப்பொருள், “ஊடகங்களில் தமிழ்” என்று முந்தைய அத்தியாயத்தில் குறிப்பிட்டிருந்தேன்.
தமிழ்க் கூட்டமைப்பின் தலைவர் திரு.தேவ் ஒருங்கிணைத்த இந்தக் கலந்துரையாடலில் இதழியல், காட்சி ஊடகங்கள், இணையதளம் ஆகியவற்றில் தமிழின் நிலை குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது.
இளையராஜாவின் “திருவாசகம்” இசைப்பணியை ஒருங்கிணைத்த அருட்திரு ஜெகத் கேஸ்பர், எடுத்த எடுப்பிலேயே “வணிக நோக்கில் செயல்படுவதால் காட்சி ஊடகங்கள் தமிழை வளர்க்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியாது” என்றார். ஆனாலும் விவாதத்தின் வெவ்வேறு தளங்களில் அது மறுக்கப்பட்டது. பொதுவாகவே ஊடகங்கள் அனைத்தின் செயல்பாட்டிலும் வணிக அம்சம் தவிர்க்க முடியாதது. எனவே, காட்சி ஊடகங்கள் எவ்விதத்திலும் விதிவிலக்கல்ல. விவாதத்தில் பங்கேற்ற அமர்வுக் குழுவினரும் சரி, பார்வையாளர்களும் சரி, ஊடகங்கள் தமிழ் வளர்ச்சிக்கு எதிர் நிலையில் இயங்குகின்றன என்ற குற்றச்சாட்டை வைத்தனர்.
இணையப் பல்கலைக் கழகத்தின் பொறுப்பில் இருக்கும் முனைவர் அனந்தகிருஷ்ணன், கணினியில் தமிழின் பங்கு பற்றி விரிவாகப் பேசினார். தமிழ் நாளிதழ்கள், வார இதழ்களைப் போலவே, காலச்சுவடு, உயிர்மை, ரசனை, போன்ற இலக்கிய இதழ்களும் இணையப் பக்கங்கள் தருவதால் அவற்றை வாசிப்பதன் வழி அயல்நாட்டுத் தமிழர்கள் தங்கள் வாசிப்பின் பரப்பை செழுமைப்படுத்தலாம் என்று நான் சொன்னேன்.
இதில் வியப்புக்குரிய விஷயம் என்னவென்றால், முனைவர் அனந்தகிருஷ்ணன், “காலச்சுவடு” இதழில் வருகிற எழுத்துக்கள் தனக்குப் புரியவில்லை என்று கருத்தரங்கில் குறிப்பிட்டதுதான்.
தமிழ் மொழிக்கு ஊடகங்கள் போதிய இடம் தரவில்லை என்கிற ஆதங்கமே இந்தக் கலந்துரையாடலில் எழுந்தது.
அமெரிக்கர்களுக்கு சுதந்திர தினம் நாட்டு நிகழ்ச்சியல்ல. வீட்டு நிகழ்ச்சி. ஓரிரு நாட்கள் முன்னதாகவே ஒவ்வொரு வீட்டின் முகப்பிலோ வாயிலிலோ தேசியக்கொடி பறந்து கொண்டிருந்தது.
தெருக்களில் பட்டாசோ வாணவேடிக்கையோ வெடிக்க முடியாது என்பது அமெரிக்காவின் கட்டுப்பாடுகளில் ஒன்று. ஊருக்கு வெளியே சில பட்டாசுக் கடைகள் பெரிய மைதானத்துடன் திகழ்கின்றன. யாருக்காவது ஆசை வந்தால், அங்கே போய் வாங்கி அங்கேயே வெடித்துவிட்டு வந்து விட வேண்டும்.
ஆனால், சுதந்திர தினம் என்றால் வாணவேடிக்கை ஒரு முக்கிய நிகழ்ச்சியாக இடம் பெறுகிறது. ஒவ்வொரு நகரத்திலும் சில முக்கிய இடங்களில் அரசு சார்பில் வாண வேடிக்கை நிகழும் என்று அறிவிக்கப்படுகிறது.
அந்த இடங்களில் எல்லாம் குடும்பத்தோடு மக்கள் பல்லாயிரக்கணக்கில் முன்னதாகவே கூடி விடுகின்றனர். நண்பர்கள், அந்த வாண வேடிக்கையைப் பார்க்க எங்களை அழைத்துச் சென்றார்கள்.
சின்னஞ்சிறு குழந்தைகள் தொடங்கி முதியவர்கள் வரை வயது பேதமின்றி பல்லாயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். இருபது நிமிடங்கள் வாண வேடிக்கை நடக்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
நட்சத்திரங்கள் பூமியிலிருந்து புறப்பட்டு வானம் நோக்கி விரைவது போல், வர்ண ஜாலங்கள். ஒன்று அடங்கும் முன் இன்னொன்று தொடங்கி ஆகாயத்தில் வரையும் அழகுக் கோலங்கள்.
வல்லரசுகளின் ஏவுகணைகளை ஏளனம் செய்தபடி ஆயிரமாயிரம் வண்ணங்களை வாரியிறைத்த வாணவேடிக்கை, அதன் நிறைவு நிமிஷங்களில் நெருப்பு மழை போல் “சடசட”வென சீறியெழும்ப, அதன் சத்தத்தோடு யுத்தம் செய்வது போல் “படபட”வெனப் புறப்பட்டது கரவொலி.
அமெரிக்காவின் அந்த ஆனந்தக் கொண்டாட்டம் அர்த்தமுள்ளது. ஏனெனில், சுதந்திரம், அமெரிக்கக் குடிமகன்களின் அன்றாட வாழ்க்கையில் முழுமையாக வாழப்படுகிறது.
சட்டத்தின் கண்களுக்கு முன் ஜார்ஜ் புஷ்ஷ§ம், சாதாரணக் குடிமகனும் சமமாகவே மதிக்கப்படுகிறார்கள். தங்கள் குடிமக்களைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறது இந்த தேசம் என்பது அமெரிக்கர்களின் அடிப்படை பெருமிதம்.
அன்று தொடங்கி அடுத்த சில நாட்கள் அமெரிக்காவின் அகலமான வீதிகளில் நெடுந்தொலைவு கார்ப்பயணங்கள் மேற்கொண்ட போது ஒன்று புலனானது.
அமெரிக்காவின் அதிசயம், பொருளாதாரம் அல்ல. பொறுப்புணர்வு. குடிமகனின் வாழ்க்கைக்கு தேசம் பொறுப்பேற்கிறது. தேசத்தின் ஒழுங்குக்கு ஒவ்வொரு குடிமகனும் பொறுப்பேற்கிறான்.
இந்த ஒத்திசைவு, அமெரிக்காவின் வீதிகளில் ஆரம்பமாவதாக எனக்குப்பட்டது.