எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
சூடு பறக்கும் கோடை நாட்களில் அமெரிக்க வெய்யில் அமிலமாய்த் தகிக்கிறது. ஆனாலும் கோடை விடுமுறையை உற்சாகமாகப் போக்குகின்றனர் அமெரிக்கர்கள். அப்படியோர் உல்லாசப் பயணமாய் என் நண்பர்கள் என்னை அழைத்துச் சென்றது, சனன்டோனியா என்னும் கடல் உலகத்திற்கு. டெக்ஸாஸ் மாநிலத்தில் உள்ள சனன்டோனியா நூற்றுக்கணக்கான ஏக்கர்கள் பரப்பளவில் பரந்து விரிந்திருக்கும் விந்தை உலகம்.
தீம் பார்க் என்கிற விஷயம் நமது நாட்டிலேயே பிரபலமாகிவிட்ட நிலையில், டால்ஃபின் ஷோ, ஸீ&லயன் எனப்படும் கடல் சிங்கத்தைக் கொண்டு நடத்தப்படும் நகைச்சுவை நாடகம், சாமு என்று அழைக்கப்படும் சுறா மீனை ஆட்டுவிக்கும் சாகசக் காட்சி ஆகியவை சனன்டோனியாவின் சிறப்பம்சங்கள்.
பயிற்சியாளர்களின் விரல் நுனி அசைவுக்கேற்ப ஆட்டுவிக்கப்படுகின்றன கடல்வாழ் உயிரினங்கள். தண்ணீரைக் கிழித்துச் செல்லும் போர்க்கப்பல்களாய் மீன்கள். ஒரு சாகசம் செய்து முடித்தவுடன் பயிற்சியாளரைப் பார்க்கக் கரைநோக்கி ஓடோடி வந்து முகவாய் உயர்த்துகின்றன டால்ஃபின்களும், சுறாக்களும். பயிற்சியாளர்களின் பாசமான அரவணைப்பைப் பொருட்படுத்தாமல் இரை கேட்டு வாய் பிளக்கின்றன.
செய்த சாகசத்திற்கு நொடி கூடத் தாமதிக்காமல் கூலி பெறுகின்றன இவை. இசைக்கேற்ப நடனமாடுவதும், தாவச் சொன்னால் தாவுவதும், மூழ்கச் சொன்னால் மூழ்குவதும், நீருக்குப் பக்கத்தில் உள்ள பளிங்குத் தரைமேல் ஏறுவதுமாய் ஏகப்பட்ட சாகசங்கள்.
மனிதனின் கையில் சிக்கினால் குரங்கு, மாமியார் வீட்டுக்குப் போக வேண்டும். யானை சைக்கிள் ஓட்ட வேண்டும், டால்ஃபின்களும், சுறாமீன்களும் ஆட்டுவிக்கும்படியெல்லாம் ஆடவேண்டும்.
மிக அபூர்வமான கடல் சிங்கங்களைக் கூட மனிதன் கோமாளியாக்கிப் பார்க்கவே பிரியப்படுகிறான் என்பதுதான் விசித்திரமான உண்மை.
உடன் வந்த என் நண்பன் கேட்டான். “இது அதிசயமில்லையா?” சிறது நேரத்திற்குப் பிறகு சொன்னேன். “என்றைக்காவது மனிதன் தன் சக உயிரினங்களை அவற்றின் இயல்பிற்கேற்ப வாழ விடுவானானால், அதுதான் பெரிய அதிசயமாக இருக்கும்” என்று.