எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
சனன்டோனியாவில் என்னை மிகவும் கவர்ந்த விஷயம், பென்குவின்கள். பனிப்பிரதேசங்களில் மட்டுமே காணப்படும் இந்தப் பறவைகள் வசிப்பதற்காக செயற்கையாய் பனிப் பிரதேசமொன்று உருவாக்கப்பட்டிருக்கிறது. தான் எங்கிருக்கிறோம் என்பது பற்றிய கவலையின்றி பொடிநடையாய்ச் சுற்றிகின்றன பென்குவின்கள். ஆங்காங்கே இயற்கைச் சூழலில் பல்வேறு பறவையினங்கள் தென்பட்டன. பத்து நாட்கள் பட்டினி கிடந்த காக்கை போல் தெரிந்த சில பறவைகளைக் காண்பித்து “இவைதான் குயில்கள்” என்றார்கள். பாடச் சொல்லிக் கேட்டிருக்கலாம். குயில்களின் பாஷை தெரியாதே!
அங்கிருந்து புறப்பட்டு அலமோ என்கிற நகரம் வந்தடைந்தோம். 1800&களில் நடைபெற்ற டெக்ஸாஸ் புரட்சியின் யுத்த களம் அலமோ. மெக்ஸிகோவின் படையோடு நடைபெற்ற பதிமூன்று நாள் யுத்தத்தின் சுவடுகள் அங்கே பத்திரமாகப் பராமரிக்கப்படுகின்றன.
அதற்குப் பலநூறு ஆண்டுகளுக்கு முன்பே போரும் வீரமும் வாழ்க்கை முறையாகவே ஆகிவிட்ட நம் நாட்டின் யுத்த பூமிகள் என் நினைவில் நிழலாடின. அலமோவின் அக்கறையில் பத்து சதவிகிதம் இருந்திருந்தாலும் நம் போர் வீரர்களின் வாழ்க்கைக் குறிப்புகள் நம் வசம் இருந்திருக்கும்.
அலமோ யுத்தத்தில் உயிர்விட்ட 189 வீரர்களின் பெயர்ப்பட்டியல், இன்றும் அங்கே விநியோகிக்கப்படுகிறது. முதல் பெயர், துணைப்பெயர், ஊர்ப்பெயர் ஆகிய விபரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. 1836&ல் நடைபெற்ற அந்தச் சிறிய யுத்தம் குறித்த பெருமிதம் அலமோ எங்கும் அலை மோதுகிறது.
அலமோவின் இன்னோர் அழகான அம்சம், ‘ரிவர்வாக்’ என்கிற பகுதி. சில கிலோமீட்டர்கள் தூரம் ஓடுகிற நதியைச் சுற்றி அழகான நடைபாதை அமைத்திருக்கிறார்கள். அற்புதமான கட்டிடங்கள் எழுப்பி இருக்கிறார்கள். அந்த நதியில் அலங்காரப் படகுகளில் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஆங்காங்கே நாடக மேடைகள் அமைந்திருக்கின்றன. நதியின் ஒரு கரையில் நாடக அரங்கம் மறுகரையில் பார்வையாளர் இருக்கைகள். நடைப் பயணத்தை சுவாரசியமாக்கும் சின்னச்சின்னப் பாலங்கள். நதிக்கரையோரத்து நாகரீகம் அதி நவீனமாய் ஒளிர்கிறது அலமோவில்.
அலமோவிலிருந்து டல்லாஸ் போகும் வழியில் இருக்கிறது ஆஸ்டின். டெக்ஸாஸ் மாநிலத்தின் தலைநகரம். தற்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ், அவரது தந்தை பெரிய புஷ் போன்றவர்கள் எல்லாம் ஆளுநராய் இருந்த ஸ்டேட் காபிடல் அது. சட்டமன்றத்தை ஒரு சுற்றுலா மையம் போல் வைத்திருக்கிறார்கள். பார்வையாளர்களுக்கு ஏக வரவேற்பு. சட்டமன்றம் நடைபெற்றுக் கொண்டிருப்பதை யார் வேண்டுமானாலும் மூன்றாவது மாடியிலுள்ள பார்வையாளர் கேலரியில் இருந்து பார்வையிடலாம்.
நாங்கள் போன நேரத்தில் சட்டமன்றம் நடை பெற்றுக் கொண்டிருந்தது. ஆவலோடு போய்ப் பார்த்த எனக்கு அதிர்ச்சி. நேருக்கு நேராக நின்று கொண்டு இரண்டு பேர் மட்டும் விவாதித்துக் கொண்டிருக்க, மற்றவர்கள் அசிரத்தையாக சாய்ந்து கொண்டும், குழு குழுவாக அரட்டையடித்துக் கொண்டும், லாப்&டாப்பை நோண்டிக் கொண்டும் இருந்தார்கள்.
விசாரித்த போது, “கவுண்ட்டி” என்றழைக்கப்படும் தொகுதிகளில் குறிப்பிட்ட தொகுதியின் கவுன்சிலர் தன் தொகுதி சார்ந்த பிரச்சினையை விவாதித்துக் கொண்டிருந்தார், மற்றவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பது தெரிய வந்தது. மற்றபடி சட்ட மன்றத்தில் எல்லோரும் சமர்த்தாயிருப்பார்கள் என்று சொன்னார்கள் எனக்கு.
இரண்டு நாள் பயணத்தின் களைப்பு துளிக்கூடப் படியாத அளவிற்கு சாலைகள் பராமரிக்கப்படுவதை அனுபவப்பூர்வமாய் அறிந்து கொண்டேன்.
திரும்பும் வழியில் கோட்டயத்துக்காரர் ஒருவரின் ‘இன்டியன் ஒவன்’ என்கிற உணவகத்தில் மதிய உணவு. நான் கோயமுத்தூர்க்காரன் என்று தெரிந்ததும் “கேரள சாயா” கோப்பை நிறையத் தந்தார். பக்கத்து ஊர்க்காரன் அல்லவா!