எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
பள்ளிப் பருவத்து நட்பு பலமானது என்பது, என் அபிப்பிராயம் மட்டுமல்ல, அனுபவமும் கூட. அமெரிக்காவின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் என் பள்ளிப் பருவத் தோழர்கள், தமிழ் மாநாட்டிற்கு நான் வரப் போவதறிந்து, என் சுற்றுப்பயணத்தை ஒருங்கிணைத்திருந்தார்கள்.
டல்லாஸில் இருக்கும் நண்பன் விஜய் ஆனந்த் குடும்பத்தினரிடமிருந்து விடைபெற்று பாஸ்டனுக்குப் பயணமானேன், அருண்குமார் என்கிற நண்பனின் இல்லம் நோக்கி…
டல்லாஸிலிருந்து பாஸ்டனுக்கு நேரடி விமானம் இல்லை. சிகாகோ சென்று மாற வேண்டும். சிகாகோ விமான நிலையமே ஒரு நகரம் போல் இருக்கிறது. ஏகப்பட்ட கடைகள், கடைகள், கடைகள்தான். அமெரிக்க உணவு வகைகள் என்னை அவ்வளவாகக் கவரவில்லை. அசந்தர்ப்பமாகப் பசியெடுத்தால் ஆபத்காந்தவன் ‘மெக்டோனால்ட்ஸ்’ கடைகள்தான். ஒரு பாக்கெட் பிரெஞ்ச் ஃப்ரைஸ்சும் ஒரு கோககோலாவும் இருந்தால் போதும். ஆனால், பெரும்பாலான விமான நிலையங்களில் சின்னச் சின்னப் பெட்டிகளில் நறுக்கப்பட்ட பழங்கள் கிடைக்கின்றன. பச்சை ஆப்பிள், பச்சை நிற தர்பூசணி என்று பலவிதமான பழங்கள், பிரெஞ்ச் ஃப்ரைஸ்சும் பழங்களுமாகப் பசியாறினேன்.
அமெரிக்கப் பெண்களும் ஆண்களும் ஆஜானு பாகுவாய் வலம் வருகின்றனர் என்றாலும், என் மனதில் ஈர்ப்பை ஏற்படுத்தியவர்கள், அமெரிக்காவில் வசிக்கும் கறுப்பின ஆண்களும் பெண்களும் தான்.
“கறுப்பே அழகு! காந்தலே ருசி!” என்று சும்மாவா சொன்னார்கள்? கண்களில் வெளிச்சம், கலப்படமில்லாத புன்னகை, கம்பீரமான அழகு, இவற்றின் கலவையாய் இருக்கிறார்கள் அவர்கள்.
பிரெஞ்ச் ஃப்ரைஸ் வாங்க நான் மணிபர்ஸைத் திறந்தபோது தென்பட்ட இந்திய ரூபாய் நோட்டுகளைப் பார்த்து, விற்பனையாளராய் விளங்கிய கறுப்பினப் பணிப்பெண் பரபரப்பாகி “What currency is this” என்றார். “இந்திய கரன்சி” என்றதும் அவர் முகத்தில் பொங்கிய மலர்ச்சி ஆச்சரியமாயிருந்தது.
ஒரு நோட்டை எடுத்து நீட்டி “Would you like to keep it” (இதை வைத்துக் கொள்ள விரும்புகிறீர்களா) என்றபோது நன்றி சொல்லி மறுத்துவிட்டார்.
சிகாகோவிலிருந்து பாஸ்டன் நோக்கிப் புறப்பட்ட விமானத்தில் அதிகக் கூட்டமில்லை. மூன்று இருக்கைகள் கொண்ட வரிசையில் முதல் ஆளாக அமர்ந்திருந்தேன். என் பக்கத்து இருக்கைக்கும் அடுத்த இருக்கைக்கு வந்த நீக்ரோ பெண்ணுக்கு மீறிப்போனால் இருபத்தைந்து வயது இருக்கும். மிக கம்பீரமாகவும், நட்பாகவும் வழி கேட்டுக் கொண்டு தன் இருக்கைக்குச் சென்றவர், ஹெட்ஃபோனை மாட்டிக் கொண்டு கண்மூடி இசையில் லயித்தார்.
ஒரு காலத்தில் ஒடுக்கப்பட்டு, இன்று கல்வியும் அறிவும் பெற்று “திமிர்ந்த ஞானச் செருக்குமாய்” உலாவரும் கறுப்பினத்தவர்களின் உயர்ந்த உதாரணமாய் அந்த இளம்பெண் திகழ்ந்தார். வலது கையின் கட்டை விரலில் சில வளையங்களை மாட்டியிருந்தது வியப்பைத் தந்தது.
பாஸ்டன் விமான நிலையத்தில் விமானம் இறங்க இறங்க அந்த நகரைப் பார்க்கும் ஆவலில் சற்றே எட்டிப் பார்த்தேன். ஓரத்து இருக்கையில் இருந்த அவர் பளிச்சென்ற சிரிப்போடு சாளரங்களைத் திறந்து “வெல்கம் டு பாஸ்டன்” என்றார்.
புகழ்பெற்ற ஹார்வர்டு பல்கலைக்கழகம் பாஸ்டன் நகரில்தான் இருக்கிறது. அந்த நகரம் ஓர் அழகுக் களஞ்சியம். பாஸ்டன் நகரைச் சுற்றிப் பார்க்க வசதியாய், “டக் டூர்” என்று ஒன்று நிகழ்த்தப்படுகிறது. ஆமாம்! நம்மை அழைத்துச் செல்கிற அந்த வாகனத்தின் பெயர் வாத்து. ஏன் தெரியுமா? அந்த வாகனம் தரையிலும் செல்கிறது. தண்ணீரிலும் செல்கிறது.
அந்தச் சின்னச் சுற்றுலாவிற்கு ஓட்டுநராகவும் வழிகாட்டியாகவும் விளங்கியவர் ஒரு பெண். அபரிமிதமான அறிவாற்றல், நிகரற்ற நகைச்சுவை உணர்வு, சுடர்விடும் சமயோசிதம் எல்லாம் கலந்திருந்தது அவரிடம், நகரத்தை சுட்டிக் காட்டுகிற வேலையென்பது “இடம்” சுட்டிப் பொருள் விளக்குவது மட்டுமல்ல. கூரிய வரலாற்றறிவு, சமகால நடப்புகள் பற்றிய நளினமாக விமர்சனம், தன் நகரம் குறித்தும் நாடு குறித்தும் பொங்கி வழிகிற பெருமிதம், இத்தனையும் சேர்ந்ததுதான் அந்தப் பணி என்பதை அந்தப் பெண் மூலம் அறிந்து கொண்டேன்.