எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
வாகனத்தில் ஏறும்போதே “ஒரு பெண் வழி காட்டியாய் வருவதை ஆட்சேபிக்கக் கூடிய ஆணாதிக்கக்காரர்கள் யாராவது வாகனத்தில் இருக்கிறார்களா?” என்று குறும்புச் சிரிப்போடு நுழைந்தார் அவர்.
‘இது “டக் டூர்”. எனவே “க்வாக் க்வாக்” என்று குரல் கொடுத்தால்தான் வண்டி நகரும்’ என்றதும் பயணிகளும், குறிப்பாகக் குழந்தைகளும் “க்வாக் க்வாக்” என்று உற்சாகக் குரல் எழுப்பினர்.
ஒரு குறிப்பிட்ட பகுதி வந்தவுடன், “இது நோ க்வாக் ஸோன்! யாரும் க்வாக் என்று குரலெழுப்பக் கூடாது” என்றார். பயணிகள் சத்தமாக “க்வாக்” என்றனர். “Don’t” என்றார். மறுபடியும் “க்வாக்” என்றனர். “Stop” என்றார். அடுத்த விநாடியே அவருக்கே உரிய சிரிப்போடு “Don’t Stop” என்றதும் கலகலத்த சிரிப்பொலியில் “டக்” குலுங்கியது.
தண்ணீரிலும் தரையிலுமாகப் பயணம் செய்யும் “டக் டூர்” பாஸ்டனில் மட்டுமின்றி அமெரிக்காவின் பல பகுதிகளிலும் நிகழ்த்தப்படுகிறது.
பொதுவாகவே அமெரிக்காவில் இத்தகைய பணிகளில் இருப்பவர்களுக்கு சம்பளம் குறைவு என்று கேள்விப்பட்டிருக்கிறேன். உணவகங்களில் பணிபுரிவோர், வழிகாட்டிகள், டேக்ஸி ஓட்டுநர்கள் என்று பலதரப்பட்டவர்களுக்கும் வாடிக்கையாளர்கள் தருகிற அன்பளிப்புத் தொகை ஒரு முக்கிய வருமானம். நாம் அதை “டிப்ஸ்” என்கிறோம். அவர்கள் “க்ராஜிடீஸ்” என்கிறார்கள்.
டக் டூர் நிகழ்த்திய பெண்ணின் இருக்கைக்கு மேலே “நன்கு செய்யப்பட்ட பணிக்கு அன்பளிப்புகள் ஏற்கப்படும்” என்கிற பலகை தொங்கிக் கொண்டிருந்தது.
பயணம் நிகழும்போதே தன் பயணிகளை தனித்தனியாக அறிமுகம் செய்து கொண்டார் அவர். நான் இந்தியாவிலிருந்து வருகிறேன் என்றதும் சக பயணிகள் முகத்தில் ஒரு மலர்ச்சி. “வெல்கம்” என்று சிநேகமாய்ச் சிரித்தார்கள்.
க்ராஜிடீஸ் எனப்படும் அன்பளிப்புத் தொகையை, அலட்சியமாய் நீட்டுவதில்லை அமெரிக்கர்கள். நல்லதாக நான்கு வார்த்தைகள் சொல்லி, காணிக்கை செலுத்தும் மரியாதையோடு நீட்டுகிறார்கள்.
அன்று மாலை, பாஸ்டன் நகரத்து வீதிகளில் என் நண்பனோடு திரிந்தேன். அங்கிருக்கும் பிரம்மாண்டமான ஷாப்பிங் சென்டர்கள் அவ்வளவு சுத்தமாகவும் நவீனமாகவும் திகழ்கின்றன.
70% வரை தள்ளுபடி தரப்படுகிறது. நம் ஊரில் ஆடித்தள்ளுபடி போல் அங்கே கோடைத்தள்ளுபடி. டல்லாஸில் கொளுத்தும் வெய்யிலில் வாடியதற்கு நேர்மாறாக, பாஸ்டனில் மழைக்காலம். அமெரிக்க ரயில்களில் பயணம் செய்ய வேண்டும் என்கிற என் ஆசையும் பாஸ்டனில்தான் நிறைவேறியது. ரயில் நிலையம் நோக்கிப் புறப்பட்டோம்.
மழை கொட்டத் தொடங்கியதால் ஒரு குடையை வாங்கிக் கொண்டு வீதியில் இறங்கினோம். குடை வான் நோக்கித் திரும்பிக்கொள்ள, அதைப் பிடித்துக் கொண்டு பாராசூட்டில் தொங்குவது போல் தொங்க நேர்ந்தது. இப்போது வந்து போன வில்மா, காத்ரீனா வகையறாக்களின் விசிட்டிங் கார்டுபோல் வீரியமாய் இருந்தது அந்த மழையும் காற்றும்.
அமெரிக்க ரயில் பயணம், மறக்கமுடியாத மற்றுமோர் அனுபவம். ரயில்நிலையங்களில் சில விநாடிகளே நிற்கின்றன ரயில்கள். ஓடும் வண்டியில் இறங்கவோ ஏறவோ இயலாது. வண்டி நகரத் தொடங்கியதும் வாசல்கள் மூடிக் கொள்கின்றன. அதிராமல் குலுங்காமல் ஓடுகின்றன அமெரிக்க ரயில்கள்.
பாஸ்டன், நமது மும்பை போல் பரபரப்பான நகரம். ஒண்டிக் குடித்தன பிளாட்டுகள் உண்டு. ஆனால் ஊருக்கு வெளியே ஒதுக்குப்புறமாய் உள்ள வீடுகள் விசாலமாகவும் அழகாகவும் இருக்கின்றன.
அமெரிக்கப் பெட்ரோல் பங்க்குகளிலும் சுய சேவை தான். வாகனத்தில் பணியாளர்கள் பெட்ரோல் ஊற்றுகிற பிரத்யேக பங்க்குகள் மிக அபூர்வமானவை. பொதுவாகவே அமெரிக்காவில் அவரவர் வேலைகளை அவரவரே பார்ப்பதுதான் பழக்கம்.
கீழ்நிலைப் பணியாளர்கள் கிடைப்பது அரிது. இதற்குமுன் நாம் பார்த்த டல்லாஸ் மாநிலத்தில், அருகிலுள்ள மெக்ஸிகோவிலிருந்து உரிமச் சீட்டுகள் ஒன்றுமில்லாமல், ஆற்று வழியாகவும், காட்டு வழியாகவும் மெக்ஸிகர்கள் வந்து சேர்கிறார்கள்.
இந்த அத்துமீறலை அறிந்து கொண்டே அமெரிக்க அரசாங்கம் அமைதி காக்கிறது. ஏன் தெரியுமா? சராசரிப்பணிகளை செய்து முடிக்கும் கூலியாட்களாக மெக்ஸிகர்கள் பயன்படுகிறார்கள்.
நகரத்தை சுத்தமாக வைத்திருக்க மெக்ஸிகோ இன மக்களை நம்பியே ஆக வேண்டிய நிலைமை. அது எந்த அளவுக்கென்றால் “மெக்ஸிகர்கள் இல்லாத ஒருநாள்” (A day without Mexicans) என்கிற பெயரில் ஒரு திரைப்படமே வந்திருக்கிறது.
பாஸ்டனில் அப்படியில்லை. தன் கையே தனக்குதவி. எவ்வளவு உயர்ந்த பணியில் இருந்தாலும், அலுவலகத்திற்குள் நுழைந்து விட்டால் பணிநேரம் முடிகிற வரையில் ஒரு நிமிடம் கூட சொந்த வேலை பார்க்க முடியாது. வாரம் நாற்பது மணிநேர உழைப்பு. வார இறுதியில் “கோடி டாலர்கள் கொடுக்கிறேன் வா” என்றாலும் யாரும் அலுவலகத்தைத் திரும்பிக் கூடப் பார்க்க மாட்டார்கள்.
கடமை, உரிமை இரண்டிலும் கண்டிப்பாய் இயங்குகிற வாழ்க்கை அமெரிக்காவின் பணி வாழ்க்கை. நாற்பது முதல் அறுபது மாடி வரை கொண்ட கட்டிடங்களில் அலுவலகங்கள் இயங்குகின்றன. ஆனால் பணிநேரம் முடிந்த பிறகு அலுவலக வளாகத்தில் நுழைய அலுவலர்களுக்கே அனுமதி கிடையாது. பணி நேரத்தில்கூட தங்கள் அலுவலகம் இருக்கும் தளத்தைத் தாண்டி அவர்களால் மற்ற தளங்களுக்கு செல்லக்கூட முடியாது. ஒவ்வோர் அலுவலரிடமும் ஒரு கார்ட் தரப்படுகிறது. தானியங்கி லிப்ட்டுகளில் அவற்றை நுழைக்க வேண்டும். முதல் இருபது மாடிகளுக்கு ஒரு லிப்ட். அடுத்த இருபது மாடிகளுக்கு வேறொரு லிப்ட் என்று தெளிவாக வரையறை செய்திருக்கிறார்கள். லிப்ட் மாறி ஏற முயன்றாலும் கார்ட் காட்டிக் கொடுத்துவிடும். இத்தனை கெடுபிடிகளுக்கு மத்தியில் உயிருள்ள இயந்திரங்களாய் பணி நேரங்களில் மனிதர்கள் செயல்படுகிறார்கள்.
பாஸ்டனை மழையோடு மழையாக சுற்றிப் பார்த்த களைப்போடு உறங்கச் சென்றேன். அடுத்தநாள் அதிகாலையிலேயே புறப்பட வேண்டும். போகப் போகிற இடம்… நயாகரா!!