எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
பிலடெல்ஃபியா, அமெரிக்காவின் இரும்பு மனிதர்கள் கூடி அரசியல் சட்டத்தை வடிவமைத்த இடம். என் பயணத்திட்டத்தின்படி அங்கே ஒருநாள் தான் செலவிட முடிந்தது. ஃபிலடெல்ஃபியாவில் பல்கலைக்கழகப் பேராசிரியராகப் பணிபுரியும் ஃபெரோஸ்பாபு, என்னை அழைத்துச் சென்ற இடம், பெஞ்சமின்ஃபிராங்க்ளின் ஆராய்ச்சி மையம். உள்ளே நுழைந்தவுடன் பிரம்மாண்டமான சிலையாய்ப் பிள்ளையார் போல உட்கார்ந்திருக்கிறார் பெஞ்சமின் ஃபிராங்க்ளின். உள்ளே காட்சிக்கென்று அபூர்வமான அறிவியல் அம்சங்கள், பெஞ்சமின்ஃபிராங்க்ளினின் பல்வேறு கண்டுபிடிப்புகள்.
அந்தக் கண்காட்சிக் கூடத்தில் மனித இதயத்தின் மாதிரி வடிவம் ஒன்று இடம் பெற்றிருக்கிறது. நாம் இதயத்திற்குள் நுழைந்து, சுற்றிப் பார்த்துவிட்டு வெளியே வரலாம். ஆனால், ஒரு நிபந்தனை. உள்ளே நுழையும்போது நாம்தான் “இரத்தம்” என்று நினைத்துக் கொள்ள வேண்டும். இதயத்திற்குள் ரத்தம் எப்படி நுழைகிறதோ அப்படித்தான் நுழைவாயில், அமைந்து இருக்கிறது. இதயத்திற்குள் இரத்தம் பாய்கிறபோது எந்த வழிகளில் பாயுமோ அப்படியே பாதை நீள்கிறது. குறிப்பாக ஓரிடத்தைக் கடந்து போகும் போதுதான் இரத்தத்தின் சிகப்பு அணுக்கள் மேலும் அடர்த்தி ஆகுமாம். அந்த இடத்தில் இருந்து சிகப்பு வண்ண வெளிச்சத்தைக் கூடுதலாகப் பாய்ச்சுகிறார்கள். நம் இருதயத்திற்குள் நாமே நுழைந்து பார்க்கிற நூதனமான அனுபவமாய் அமைந்தது அது.
அந்த ஆராய்ச்சி மையத்தின் இன்னொரு சிறப்பம்சம் ஐமாக்ஸ் திரையரங்கம். 270 டிகிரிக்குப் பரந்து விரிந்திருக்கிறது வெண்திரை. தலைக்கும்மேல் ஆகாயம்போல் கவிந்து கிடக்கிறது.
அந்த அரங்கில் நான் பார்த்த திரைப்படம் லயன்ஸ் ஆஃப் கிலஹரி (கிலஹரியின் சிங்கங்கள்). சிங்கங்களின் வாழ்க்கை ஒரு சிறுகதை போல் காட்டப்பட்டிருக்கிறது. புனையப்பட்ட கதையல்ல. நடந்த & நடந்து கொண்டிருக்கிற கதை.
“ஒரு ஊரில் ஒரு சிங்கமாம்” என்பது போலத் தான் கதை தொடங்குகிறது. அந்தச் சிங்கத்திற்கு இரண்டு “வீடு”கள். மூத்த பெண்சிங்கம் பொறுப்பான, சுறுசுறுப்பான குடும்பத்தலைவி. இளைய பெண் சிங்கம் சோம்பேறி. மூத்த பெண்சிங்கம் பிடித்துவரும் இரையைப் பிடுங்கிச் சாப்பிடுகிற பிறவிகள் இரண்டும், காலப்போக்கில் ஆண்சிங்கம் தளர்கிறது. இன்னொரு இளைய சிங்கம் காட்டுக்கு வெளியே முகாமிடுகிறது. நிலாக்கால இரவொன்றில் மூத்த ஆண் சிங்கத்தை அது போருக்கு அழைக்கிறது. மூத்த சிங்கம் கடும் காயங்களோடு காட்டுக்குத் திரும்புகிறது. பிறகொரு நாள், மூத்த சிங்கத்தைத் தன்னுடையதாக்கிக் கொள்கிறது அந்த அந்நிய ஆண் சிங்கம்.
காட்டில் பதுங்கியிருந்த காமராவின் கலை வண்ணம், அந்த பிரம்மாண்டமான திரையில் விரிந்த போது எழுந்த சிலிர்ப்பு, இப்போது நினைத்தாலும் ஏற்படத்தான் செய்கிறது. முகத்துக்கு மிக அருகே தெரியும் சிங்கங்கள். திரியும் யானைகள், பதுங்கல் நடையிட்டு இரையைப் பிடிக்கப் பாயும் சிங்கத்தின் தசைகளின் அசைவுகள் எல்லாம், இது பிம்பமல்ல, நிஜத்தின் பிரம்மாண்டம் என்று நினைக்கத் தூண்டுகின்றன.