எனக்கே சிரிப்பு வரும் சமயத்திலே… புத்தகத்திலிருந்து…
ஃபிலடெல்ஃபியாவிலிருந்து பாஸ்டன் திரும்ப விமானநிலையம் வந்தேன். பாஸ்டனில் இருந்துதான் இந்தியா திரும்புவதாகத் திட்டம். பாஸ்டன்ஃபிலெடல்ஃபியாவுக்கு ஏர்டிரான்ஸ் என்கிற உள்ளூர் விமானம், நம்மூர் ரயில்கள் போல் இரண்டு மணி நேரத் தாமதம்.
அதைவிட வேடிக்கை, வெவ்வேறு ஊர்களுக்காக அருகருகே நிற்கிற விமானங்களில், நம் கிராமத்துப் பேருந்துகளில் நடப்பது மாதிரி விமானம் மாறி ஏறுகிற கூத்துகளும் நடந்தன. விமானி பலமுறை அறிவித்தபிறகு “ஓ! காட்” என்று இறங்கி அடுத்த விமானத்தில் தொற்றிக் கொண்டவர்களும் உண்டு.
விமானம் கிளம்பப் போகிறது என்று நினைத்த போது “அடடா! மறந்தே போச்சு!” என்பது போல அவசரம் அவசரமாய் எரிபொருள் நிரப்பினார்கள்.
விமானி, விமானம் மாறி ஏறி, விமானத்தை வேறு பக்கம் ஓட்டிப் போய்விட்டால் என்னசெய்வது என்கிற கவலை கூட ஏற்பட்டது.
மறுநாள் மதியம் பாஸ்டனில் இருந்து புறப்பட்டு ஃபிராங்க்ஃபர்ட்டில் விமானம் மாறி இந்தியா நோக்கி இறக்கை கட்டிப் பறந்தது மனசு. இந்தியாவிலிருந்து அமெரிக்கா போகும்போது ஃபிராங்க்ஃபர்ட்டில் விமான நிலையத்தின் பாதுகாப்புக் கெடுபிடிகள் பற்றி முன்னர் குறிப்பிட்டிருந்தேன். ஆனால் இந்தியாவுக்கு வரும் போது ஃபிராங்க்ஃபர்ட் விமானநிலையத்தில் அவ்வளவாகக் கண்டுகொள்ளவில்லை. கைப்பை பரிசோதனைகள் கிடையாது. கி.ரா.பாணியில் சொன்னால், “ஏங்கொரங்கே” என்று கேட்கக் கூட யாருமில்லை.
‘சென்னை’ பெயர் மாற்றத்தகவலை ஃபிராங்ஃபர்ட்டுக்கு யாரும் இன்னும் சொல்லவில்லை போல “மெட்ராஸ் ஃப்ளைட்” என்றுதான் அறிவிப்புகள் காணப்படுகின்றன. நள்ளிரவில் சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கியபிறகு, காதோரத்தில் ஒரு பாடல் கேட்டுக் கொண்டேயிருந்தது. “சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலாகுமா” என்பதுதான் அது.
இன்னும் என்னை உறுத்திக் கொண்டிருக்கிற கேள்வி ஒன்று. அமெரிக்காவிலிருந்து விமானம் கிளம்பும்போது, இயல்பாக இருந்த பக்கத்து இருக்கைப் பெண், ஃபிராங்க்ஃபர்ட் விமான நிலையத்தை விமானம் நெருங்க நெருங்கக் கண்கள் கலங்கி, விமானம் தரை தொட்டவுடன் குலுங்கிக் குலுங்கி அழுதாரே. அது ஏன்-?
அமெரிக்காவில் இருந்து திரும்பிய பின்பு ஒருநாள் படப்பிடிப்புக்காக ஊட்டிக்கு அழைத்திருந்தார்கள். அங்கு போனால் நான் அணிந்து கொள்வதற்கு கரடி உடை காத்திருந்தது. படத்தில் நான் அறிமுகமாகும் அந்த முதல் காட்சிதான் படப்பிடிப்பில் நான் நடித்த கடைசிக் காட்சி. முதற்கட்டப் படப்பிடிப்பின் போது ஜெயமோகனிடம் சொல்லி இருந்தேன், “சினிமாவில நடிக்கிறதெல்லாம் நமக்கு வேண்டாத வேலைன்னு நினைக்கிறேன்”. இதை அவர் லோகிததாஸிடம் சொல்லியிருக்கிறார். அதற்கு லோகிததாஸ் “அங்ஙன தோணும்! ஸ்கிரினில் முகங்கண்டால் வீட்டில் இரிக்க பொறுதி உண்டாவில்லா” (அப்படித் தோன்றும்! ஆனால் திரையில் தன் முகத்தைப் பார்த்துவிட்டால் சும்மா இருக்க முடியாது) என்றாராம்.
லோகி எவ்வளவு பெரிய இயக்குநர். அவர் சொன்னால் சரியாகத்தானே இருக்கும்!