மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
ஆலயம் ஒன்றின் குட முழுக்குக்குப்
போய் வருகின்ற பாதையில் தனது
பூர்வாசிரம வீடு தென்பட
காரை நிறுத்தக் கட்டளை பிறந்தது!
பீடாதிபதியாய்ப் பட்டம் தாங்கி
ஆண்டுகள் இரண்டே ஆகியிருந்த
இளம் சந்நியாசி, இல்ல வாசலில்
“எழுந்தருளியதும்” ஒரே பரபரப்பு;
“சித்தப்பா”! என சிலிர்த்த சிறுவனின்
வாய் பொத்திற்று வளைக்கரமொன்று
“வரணும் சாமி வரணும்” மெதுவாய்
முனகிய கிழவரை “அப்பா” என்று
அழைக்க நினைத்து அடங்கிய சாமியால்
அபயஹஸ்தம் உயர்த்த முடிந்தது;
பாத பூஜைக்கு ஆயத்தம் நடந்ததால்
வாசலிலேயே நின்றது சாமி;
விம்மல் அடக்கி வேகவேகமாய்
செம்புத் தண்ணீர் சுமந்து வந்து & தன்
முன்னாள் தம்பியின் பொன்னார் திருவடி
அலம்பித் துடைத்து சந்தனம் தடவி
விழுந்து கும்பிட்ட வேளையில், கண்ணீர்த்
துளிகளும் தெளித்த தமக்கைக்கு, சாமி
வேறென்ன கொடுக்கும் விபூதியைத் தவிர?