மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
பசித்த பயணிகள் நிரம்பிய ரயிலில்
எவர்சில்வர் தட்டு முகத்தை மறைக்க
“பூரி கிழங்கு மசால்வடை” என்று
கூவியபடியே, கூப்பிடும் முன்னர்
நேர்த்திக் கடன் போல் நடந்தார் கிழவர்;
அழைக்க நினைத்த பலரும் அவரின்
அலட்சியம் உணர்ந்து அமைதி ஆயினர்;
கட்டி வந்த பொட்டலங்களை
விற்க மறுக்கும் வீம்பும் கோபமும்
பூரிகள் சுட்ட மருமகள் மீதா?
பொட்டலம் கட்டிய பிள்ளையின் மீதா?
தடதடக்கின்ற ரயில் சத்தத்தில்
ஒருமணி நேரம் தூங்கிய திருப்தியில்
எழுந்து உட்கார்ந்த எதிர் சீட் பெண்ணுக்கு
இருபதுக்குள் தான் இருக்கும் வயது;
“சளசள” வென்ற குரல்கள் நடுவிலும்
சலனமில்லாமல் தூங்கி எழுந்து
மெதுவாய் மலர்த்திய சினேகக் கண்களில்
வயதுக்கேற்ற கனவுகளில்லை;
மிரட்சியோ, கலக்கமோ, அந்நியன் எதிரே
அயர்ந்து தூங்கிய கூச்சமோ இன்றி
கைப்பை திறந்தது, பொட்டலம் பிரித்தது,
எல்லாம் எல்லாம் இயல்பாயிருந்தது;
தொந்தரவில்லாத சகபயணிகளாய்த்
தந்திக் கம்பங்கள் தாண்டிக் கொண்டிருந்தோம்!
எதிரெதிர் இருக்கையில் எங்கள் பயணம்
அவரவருக்கு அவரவர் உலகம்.
தனியாய் போகும் மகளை ரயிலில்
ஏற்றிவிட வந்து, எதிர் சீட்டில் இருந்த
என்னை முறைத்த பெரியவருக்குத்தான்
இன்றைக்கிரவு தூக்கம் வராது!