மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
கூச்சல் நிரம்பிய காட்டில் எப்போதும்
மான்கள் மட்டும் மௌனமாயிருக்கும்;
மௌனமாயிருப்பதை அமைதியென்று
தவறாய்ப் புரிந்து கொள்பவர் அதிகம்;
முட்டி மோதும் மூர்க்க மார்க்கம்
புத்தியில் உறைக்கும் பொழுதில் எல்லாம்
அன்பின் வடிவாய் அமைந்த மான்கள்
கொம்பு சிலிர்த்துக் கிளம்புவதுண்டு;
சாந்தம் ததும்பும் சின்னக் கண்கள்
ஏந்தும் நெருப்பில் எரியும் காடு;
எல்லையில்லாத யுகங்களாய் இங்கு
அம்புமுனையும் குண்டும் பட்டுத்
துள்ளிச் செத்த துக்க நினைவில்தான்
புள்ளிகள் உடம்பில் பெற்றன மான்கள்;
அவற்றைக் கவிதைகள் அழகெனப் புகழ்ந்தால்
அவமானத்தில் மான்கள் குறுகும்;
மானின் தோலில் ஆசனம் அமைத்த
சாது மிரண்டால் காடு கொள்ளாது;
சாபம் கொடுக்கிற சக்தியைத் தனக்கு
மான்கள் கொடுத்ததை மறைத்தனர் முனிவர்.
கவரிமான் புள்ளிமான் கஸ்தூரிமான் என
ஜாதி பிரிக்கும் மனிதர்கள் பார்த்துக்
காட்டில் மான்கள் காறி உமிழும்;
கோரைப்புற்கள் காய்ந்த அதிர்ச்சியில்
கோடைக்காலப் பொய்கை வறட்சியில்
பொங்கும் கோபம் வெளித்தெரியாமல்
அங்கும் இங்கும் மான்கள் அலையும்;
அறையும் புலியின் ஆவேசக் கண்களும்
காட்டுச் சிங்கத்தின் கோரப் பற்களும்
எந்த விநாடியும் தீண்டும் அளவு
பத்திரமற்றது மான்களின் வாழ்க்கை;
அசையாச் சொத்தாய்ப் பெரிய தொப்பையும்
ஆலைகள் பத்தும் உள்ளவர் மார்பில்
ஆறு பவுனில் புரளும் சங்கிலி
கோர்த்துக் கிடக்கும் புலிப்பல் கிழித்து
எத்தனை மான்கள் இறந்து போயிருக்கும்!
அவரின் வீட்டுச் சுவரின் மீது
அலங்காரப் பொருளாய் மான்கொம்பு பார்த்ததும்
கிளர்ந்தது எனக்குள் கோபம்-அந்த
மானாய் இருந்தது நானாய் இருக்குமோ?