மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
சர்க்கஸ் வந்தாலே யானைகள்தான் என்
நினைவில் வந்து நெஞ்சைப் பிழியும்;
ஆகிருதிக்குப் பொருந்தி வராத
செய்கைகள் புரிபவை சர்க்கஸ் யானைகள்;
பிளிறல் மறந்த சதை எந்திரமாய்
வரிசையில் வந்து வணக்கம் சொல்லும்;
கைக்குக் கிடைத்த மரங்களை இழுத்துத்
துவம்சம் செய்யும் துதிக்கை சுருக்கி,
ஹாண்டில் பாரைப் பற்றிக் கொண்டு
அவஸ்தை அவஸ்தையாய் சைக்கிள் ஓட்டும்;
தயாராய் இருக்கும் சிவலிங்கம் மேல்
தும்பிக்கையால் தண்ணீர் தெளிக்கையில்
குன்றினில் பாயும் அருவியில் குளித்த
கன்றுப் பருவத்தின் கனவுகள் துளிர்க்கும்;
எந்த இலக்கும் இல்லாமலேயே
பந்தை உதைத்துப் பாவமாய் விழிக்கும்;
பாறைகள் உருட்டும் பிருஷ்ட பாகத்தில்
கோமாளிகளின் மட்டைத் தாக்குதல்;
கூடாரத்தில் குழந்தைகள் சிரிக்கும்;
கைத்தட்டல்கள் காதைப் பிளக்கும்;
காட்சி முடிந்ததும் குடும்பத்தோடு
வீடு திரும்பி வேலைகள் முடித்து,
பிள்ளைகள் தூங்கப் புணர்ந்து சலித்து
விடியும் வரைக்கும் வாய் பிளந்துறங்கி
அலாரம் அடிக்க அலறியெழுந்து
டப்பா நிறையத் தயிர்சாதத்துடன்,
சர்க்கஸ் யானைகள் வேலைக்குப் போகும்;