மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
வெளியெங்கும் உலர்த்திய பனிப்புடவைகளை
மெதுவாய் மெதுவாய் மடிக்கிறாள் மார்கழி;
மாற்றலாகிப் போகிற பெண்ணின்
விடுதி அறைபோல் வெறுமையில் வானம்;
மூர்க்கமான பனியின் அணைப்பை
பலவந்தமாகப் பிடுங்குது காலம்;
முதுகுத் தண்டை உலுக்கும் குளிரின்
சிலிர்ப்புக்கினிமேல் நெடுநாள் ஆகும்;
வாசலில் மினுங்கும் வெள்ளைக் கோலம்
பறங்கிப்பூ இழந்து வைதவ்யம் பூணும்.
காது மப்ளரைத் தாண்டும் குளிரின்
கிளுகிளுப்பினிமேல் கிழங்களுக்கில்லை;
தை பிறக்கும் போது வழியும் பிறக்கும்
மார்கழி இழக்கும் வலியும் இருக்கும்.
முப்பது நாட்களாய் ஒலித்த பஜனைக்கு
மறுபடி ஏங்கும் கடவுளின் காதுகள்;
“மாதங்களில் நான் மார்கழி” என்று
கண்ணனின் செவ்விதழ் கனவில் முனகும்;