மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
நீண்டு கிடக்கும்உன் பாதையிலே
நிற்கிற மரமாய் நானிருப்பேன்!
வேர்களில் ஊறிய ஈரத்துடன் & குளிர்
விசிறிகள் விசிறக் காத்திருப்பேன்!
காலங்காலமாய் நிற்கின்றேன் & உன்
காலடி ஓசை எதிர்பார்த்து!
கோடைப் பொழுதிலும் இலைகளெல்லாம்
உதிரவிடாமல் வழிபார்த்து!
அடடா… அடடா… வருகின்றாய்
அமுதம் எனக்குள் சுரக்கிறதே!
“இதுதான் உன் இடம் வா”வென்றே
கிளைகள் காற்றில் குதிக்கிறதே!
மண்ணைப் பஞ்சணை ஆக்கிவிட்டேன்
மெல்லிய சருகுகள் நீக்கிவிட்டேன்
வண்ணப் பறவைகள் கூடுகட்டி & உன்
விழிமயங்கும் வரை பாடவிட்டேன்!
நிழலை விரித்தேன் தூங்கிக் கொள்;
நிறைகனி உள்ளது வாங்கிக் கொள்;
அழகிய மலர்கள் பூத்திருக்கும்…
அத்தனையும் கையில் ஏந்திக் கொள்;
முரட்டு மரமில்லை, என்மேல் நீ
கால்கள் வைத்தும் ஏறிக்கொள்;
கருணை இருந்தால் எனில் கலந்து
விழுதாய் இறங்கித் தாங்கிக் கொள்!