மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
(உள்ளுர் தொலைக்காட்சி ஒன்றில், நேயர்கள் முதலடி எடுத்துக் கொடுக்க கவிஞர்கள் கவிதை பாடும் நிகழ்ச்சி நடந்தது. அப்படி எழுதிய கவிதை இது. அடியெடுத்துக் கொடுத்த அன்பர் திரு.சரவணக்குமார். காந்தி வீதி, அம்பேத்கார் நகர், வேலாண்டிபாளையம், கோவை).
நிலாப் பெண்ணே உன் பயணத்தில் நிறுத்தமென்பதில்லையா?
நீலவானம் முழுவதும், நீ நடை பழகும் எல்லையா?
உலாப் போகும் பேரழகி ஓய்வு தேவையில்லையா?
ஓடி ஓடித் தேய்பிறையாய் இளைப்பவள் நீ இல்லையா?
இரவு நேரம் தனிமையிலே யாரைத் தேடிப் போகிறாய்?
இருண்டிருக்கும் பூமியில் நீ என்னவெல்லாம் பார்க்கிறாய்!
பிரிந்திருக்கும் காதலர்க்குப் பெரியதுன்பம் ஆகிறாய்!
பிணைந்திருக்கும் ஜோடிக்கெல்லாம் போதை இன்னும் சேர்க்கிறாய்!
கற்பனைக்குத் தாய்மடியாய்க் கனிந்திருக்கும் தேனிலா,
கால்பதித்து நீ நடக்கக் கம்பளங்கள் வானிலா?
ஒப்பனையே தேவையின்றி ஒளிருகின்ற வெண்ணிலா
உன்னழகின் நகல்கள்தானே உலகில் நூறு பெண்ணிலா
அலைகளிலே குளித்தெழுந்த அழகு உனது நளினமா? & நீ
ஆகாயப் பெண்மனதில் எழுந்த சிறு சலனமா?
நிலாப்பெண்ணே உனது கதை முடிவிலாத புதினமா?
அமாவாசை அன்று மட்டும் தலைமறைவுப் பயணமா?
திட்டுத் திட்டாய் மேகங்களைத் தெளித்ததங்கே யாரடி?
தினம்புதிதாய் வான்பரப்பைத் துடைத்து வைப்பதாரடி?
மொட்டுப்போலப் பூத்து நிற்கும் மோகநிலாக் கன்னியே
மெல்லமெல்லப் புன்னகைக்கும் மர்மமென்ன கூறடி?
நட்சத்திரக் கூட்டம் உன்னை நெருங்கி வர ஏங்கலாம்
நீ நடந்தால் முகில்களெல்லாம் தாவி வந்து வாங்கலாம்
உச்சி வானில் தினம்தினமும் ஊர்வலம் நீ போகலாம்
உன்னழகில் லயித்திருந்து காலையில் போய்த் தூங்கலாம்.
ஜோதி நிலா உன்னுடலில் படிந்த கறை என்னது? & அது
செத்து விட்ட காதலர்கள் கண்ணீரால் வந்தது!
காதலுக்கு முகவரி உன் கைவசத்தில் உள்ளது & அதை
காலை வரும் முன்பாய் நீ வெளியிடுதல் நல்லது.