மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
நிலவில் தெறிக்கும் கிரணங்களை – அது
நதியில் எழுப்பும் சலனங்களை
மலரில் துளிர்க்கும் அமுதங்களை – அதன்
மகரந்தத்துக் கடிதங்களை
சிறகு சிலிர்க்கிற பறவைகளை – அதன்
சின்னக் கண்களின் கனவுகளை
கதவு வைக்காத மனதுக்குள்ளே – தினம்
கொட்டிக் குவிப்பது கவிதைமனம்
வெள்ளிப் பனித்துளி மகுடமுடன் – புல்
வெய்யில் வரும் வரை அரசமைக்கும்
மெல்லிய தென்றல் இதைப் பார்த்து
மலர்களின் செவிகளில் முணுமுணுக்கும்
துல்லிய குரலில் குயில்களெல்லாம் – ஒரு
தெய்வப் பாடலுக்கிசையமைக்கும்
கள்ளினும் மேலாய் வெறிகொடுக்கும் – இந்தக்
காட்சியில் கரைவது கவிதைமனம்
புலரும் காலைப் பொழுதினிலும்
புள்ளினம் தூங்கும் இரவினிலும்
உலவும் காற்றின் முத்தத்தில்
உலரும் வியர்வைப் பகலினிலும்
உணர்வுக் கதவுகள் திறந்திருக்க
உயிரின் சாளரம் திறந்திருக்க
கனவின் சுடரொளி அணையாமல்
காத்து நிற்பது கவிதைமனம்
நரம்புகள் பிழியும் காமத்தில்
நடுங்க வைக்கிற கோபத்தில்
வரம்புகள் மீறும் நேசத்தில்
வாட்டி எடுக்கிற சோகத்தில்
திரும்பத் திரும்பத் தன்னுயிரைத்
தீயில் இடுகிற யாகத்தில்
தளும்பித் தளும்பிக் கவிதைகளைத்
தந்து கொண்டிருப்பது கவிதைமனம்
விதையைக் கிழிக்கிற முளையன்று
வீரியத்தோடு கிளர்வது போல்
முகிலைக் கிழிக்கிற மழைத்துளிகள்
மண்ணைத் தீண்ட நகர்வது போல்
இருளைக் கிழிக்கிற கொடிமின்னல்
இடியாய் மண்ணில் இறங்குதல்போல்
உயிரைக் கிழிக்கிற கருவெடுத்து
உருவம் கொடுப்பது கவிதைமனம்
பாடுபொருளில் லயித்தபடி – ஒரு
பரவச வார்த்தைக்குத் தவித்தபடி
கோடு கிழிக்கிற சிந்தனையும் – வந்து
கொட்டும் வெளிச்சத்தில் சிலிர்த்தபடி
பேறு காலத்துப் பெண்ணினைப்போல்
பாரம் இறக்கிடத் துடித்தபடி
ஏடு மணக்கிற பாடல்களை – தினம்
எழுதிக் குவிப்பது கவிதைமனம்