மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…
நிலவினை வருடி ஒளிமுத்தம் பெறுவேன்
முகிலினை வருடி மழைமுத்தம் பெறுவேன்
தளிர்களை வருடிப் பனிமுத்தம் பெறுவேன்
மலர்களை வருடி மதுமுத்தம் பெறுவேன்
சலங்கைகள் வருடி ஜதிமுத்தம் பெறுவேன்
ஸ்வரங்களை வருடி இசைமுத்தம் பெறுவேன்
கனவுகள் வருடிக் கவிமுத்தம் பெறுவேன்
உளிகளை வருடிச் சிலைமுத்தம் பெறுவேன்
அருவிகள் வருடிக் குளிர் முத்தம் பெறுவேன்
நதிகளை வருடி அலை முத்தம் பெறுவேன்
பறவைகள் வருடிப் புது முத்தம் பெறுவேன்
மழலைகள் வருடி மலர் முத்தம் பெறுவேன்
கதிரொளி வருடிக் கனல்முத்தம் பெறுவேன்
கள்ளிகள் வருடி முள் முத்தம் பெறுவேன்
எரிமலை வருடி சுடு முத்தம் பெறுவேன்
மின்னல்கள் வருடி இடி முத்தம் பெறுவேன்
இரவினை வருடி இருள் முத்தம் பெறுவேன்
புதிர்களை வருடி பதில் முத்தம் பெறுவேன்
உறவுகள் வருடி உயிர் முத்தம் பெறுவேன்
பிரிவுகள் வருடி வலி முத்தம் பெறுவேன்