கேட்ட நொடியில் கவிதை தரும்
கற்பக விருட்சமாய் உன் நினைவு;
மீட்டும் யாழின் வடிவினிலே – என்
மடியில் கிடப்பதாய் ஒரு கனவு;
பௌர்ணமிப் பாடல்கள் பெய்தவளே – எனைப்
பாவலனாகச் செய்தவளே!
கைநழுவிச் சென்ற காவியமாய் – எனைக்
கண்கலங்கச் செய்யும் பொன்மகளே!
பாதச் சுவடும் காணவில்லை – நீ
பறந்தா போனாய் அஞ்சுகமே?
கீதக் கவிதைகள் புனைகையிலே – எங்கோ
கானல் நீராய் உன்முகமே!
கண்கள் களைக்கத் தேடுகிறேன் – உன்னைக்
காணவில்லை உள்ளம் தாளவில்லை,
பெண்களை எல்லாம் பாடுகிறேன் – உன்னைப்
போல இல்லை, நிகர் யாருமில்லை.
விடைபெறுவதற்கே வந்தவளே – அடி
விசித்திரக் காதல் தேவதையே
கடந்தன வருடங்கள் என்றாலும் – என்
கவிதைகள் அதனை நம்பலையே
நேற்றுவரை உடன் இருந்ததுபோல் – இந்த
நிமிடத்தில் உன்னைப் பிரிந்ததுபோல்
மாற்றமுடியாக் காயமொன்று – என்
மனதில் உள்ளது தேவதையே!
ஆயுள் முடிகிற பொழுதினிலும் – இங்கே
ஆறாக் காயம் அது தானே
தீயும் பிரிவும் வேறில்லையே
தகிக்கிற தன்மை பொது தானே!
இன்றென் அருகில் நீயில்லை – அட
இருந்தும் எப்படி இயங்குகிறேன்
எங்கோ படிப்பாய் எனத் தானே – நான்
இத்தனை கவிதைகள் எழுதுகிறேன்
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…