அத்தனை காலம் வளர்ந்த நம் காதல்
‘சட்’டெனக் கலைந்த அதிர்ச்சியில் போனவன்
வருடங்கள் கடந்துன் வீடு வந்திருந்தேன்!
வீட்டு வாசலில் இருந்த திண்ணை
என்னைப் போலவே இடிந்து போயிருந்தது;
முகப்பிலிருந்த ஓடுகள், நமது
கனவுகள் போலக் கருகிக் கிடந்தன;
முற்றத்தின் மேல் இரும்புக் கம்பிகள், என்
உற்சாகம் போல் துருப்பிடித்திருந்தன
பின் வாசலின் பீர்க்கங் கொடி மட்டும்
உன் நினைவுகள் போல் பசுமையாயிருந்தன
அடிக்கடி மனதில் வந்து போகிறது
‘சரசர’வென்று நீ வரைகிற கோலம்;
நினைவில் அடிக்கடி நிழலாடுகிறது
இலையிட்டுப் பரிமாறும் உன் வேகம்;
நெஞ்சில் இன்னும் கனமாயுள்ளது
நமது நேசத்தில் குறுக்கிட்ட காலம்;
ஞாபகம் வற்றும் நாளினிலாவது
ஆறிடுமோடி… காதல் காயம்?
வாசல் திண்ணை, வீட்டு முற்றம்
எல்லா இடத்திலும், என்றோ எதையோ
நின்று பேசி நீ போய் விட்டாய்
நகராமல் நான் நின்று கொண்டிருக்கிறேன் – உன்
வீட்டுக்கும் மனசுக்கும் வெளியிலேயே;
எனக்குப் பிறக்காத உன் குழந்தைகளும்
உன் கரு வளரா என் குழந்தைகளும்
நமக்கு என்னவோ நம் குழந்தைகள்தான்!
வளவளவென்று பேசியிருந்தால் – அந்த
வார்த்தைச் சூட்டில் வாழ்ந்து கொண்டிருப்பேன்;
விரல்கள் பற்றிச் சிலிர்த்திருந்தால் – அந்த
வெப்பத்தில் இன்றும் குளிர் காய்ந்திருப்பேன்;
தொலைவில் நின்றே தொலைந்து போனவளே
நெஞ்சில் ஏனடி நெருக்கியடிக்கிறாய்?
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…