பெருகும் தவிப்பைப் பரிசாய் எனக்குத்
தந்து போனதில் திருப்தியா உனக்கு?
அருகில் இருந்த வரையில் அடங்கி, நீ
இறங்கிப் போனதும் எழுந்தது மிருகம்;
நாகரீகம் போர்த்த வார்த்தைகள்
மோக வெள்ளத்தில் மூழ்குது சகியே;
வரும் புயலுக்கு வேலிகள் தெரியுமா;
மனதின் பாஷைக்கு மரபுகள் புரியுமா;
நெருங்கியிருந்தும் தூர இருப்பதில்
நெருஞ்சிப் புதர்கள் நெருடும் தெரியுமா;
உள்ளங்கை வழி இறங்கிய வெப்பம்
கன்னம் படர்ந்து கழுத்தில் இறங்கி
தேகம் முழுதும் தீயாய் அலைகையில்
வேகமெடுத்து வெறிகொளும் நரம்பும்;
விரக நெருப்பில் விறகாய் எரிகிற
நரக அவஸ்தை நீயறியாததா?
தேகம் மறந்த தெய்வீகக் காதல்
சாகும் வரைக்கும் சாத்தியமில்லை;
மோகம் என்கிற பூகம்பத்தை
விழுங்கும் வித்தை விளங்கவேயில்லை;
அதரப் பிளவில் அதிர இறங்கி
உதிரம் குடித்தால் உயிர்த்தீ ஊறும்;
ஆடை மறைத்த அழகுப் புதையலை
மோதி உடைத்தால் மோகம் தீரும்;
மெள்ளத் தழுவிப் பள்ளி சேர்கையில்
கள்ளிமுள் கிழித்த காயம் ஆறும்;
கன்னம் வருடிக் கண்கள் துளைத்து
முன்னும் பின்னும் முத்தம் விதைத்து
எனக்குள் தொலைத்த ஏதோ ஒன்றை
உனக்குள் தேட உன்மத்தமாகும்;
இப்படி எனக்குள் எழும் பிரளயத்தை
எப்படித் தனியாய் எதிர்கொள்ளக் கூடும்?
நேசம் வளர்ந்தது நிஜமா? பொய்யா?
நெருக்கம் மலர்ந்தது நிஜமா? பொய்யா,
பேசி முடியாப் பெருஞ்சுழல் ஒன்று
வீசியடிக்கிற வெறிதான் பொய்யா?
எரிமலைக் குழம்பாய் எனக்குள் பொங்கி, நான்
சரிவது உனக்குச் சம்மதம் தானா?
பெண்ணே சொல்லடி பெண்ணே… இன்னும்…
உன்பதில் என்ன மௌனம் தானா?
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…