பொன்னில் வடித்த சிலைக்குள்ளே – சில
பூக்கள் மலர்ந்தது எப்படியோ?
என்னை நனைத்த தேனலையே – கரை
ஏறிப் போவதும் எப்படியோ?
அபிநயக் கண்களின் ஆழத்திலே – நான்
அசுர வேகத்தில் மூழ்கிவிட்டேன்
சலங்கை ஒலி தந்த தாளத்திலே – என்
இதயத் துடிப்பினை மீட்டு வந்தேன்!
மின்னல்கள் ஓடிய புன்னகையில் – என்
மனதைக் குருடாய்ப் போக்கிவிட்டேன்
உன்னைத் தீண்டிய மறுகணமே – சில
உலகக் கவிதைகள் ஆக்கிவிட்டேன்!
உயிரில் சுரந்த அமுதமெல்லாம் – உன்
உதடுகள் வழியே வழிந்ததடி
சுயங்கள் உதறிய பின்னால்தான் – இன்ப
சுகத்தின் சூட்சுமம் அவிழ்ந்ததடி!
பச்சை நரம்புகள் துடித்ததிலே – ஒரு
பிரளயம் எனக்குள் வெடித்ததடி
உச்ச வரம்புகள் உடைத்தபடி – ஓர்
ஊற்றெனக்குள்ளே கிளர்ந்ததடி!
கூந்தலை வருடிக் கொடுத்த கையில் – ஒரு
கோடி மலர்களின் வாசமடி – நீ
சாய்ந்து கிடந்த தோளிரண்டில் – சில
சந்திரச் சுவடுகள் மீதமடி!
அதரச் சித்திரம் தீட்டித்தந்தாய் – அதில்
ஆயிரம் ஆயிரம் வண்ணமடி!
மதுரம் மறைத்த இடத்திலெல்லாம் – ஒரு
மழலையாகிட எண்ணமடி!
நாளை என்பதே இல்லையென்று – அந்த
நிமிடங்கள் மட்டும் உறைந்ததடி
வாளிப்பான உன் தேகத்திலே – என்
வார்த்தைகள் இறைந்து கிடந்ததடி!
உன்னை என்னில் நீ தேட – அடி
உனக்குள் என்னை நான்தேட
என்னவெல்லாம் நிகழ்ந்ததுபார்
இந்த வெறிகொண்டு நான்பாட!
ஒருவரில் ஒருவர் கரைகையிலே – இமை
ஒட்டும் கண்ணீர் தேன்சிந்தும்
கரையே இல்லாக் காதலுடன் – உன்
கை கோர்த்தாலே ஆனந்தம்!
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…