அத்தனை மென்மையும் சேர்த்து வைத்தாய் – ஓர்
அழகி உன்போல் பிறந்ததில்லை!
மொட்டுக்கள் திறந்த மலர்களெல்லாம்
இத்தனை புதிதாய் இருந்ததில்லை!
கொடுப்பதும் எடுப்பதும் யாரென்று
கூடல் பொழுதில் தெரியாது
இழப்பதும் பெறுவதும் ஏதென்று
இரண்டு பேருக்கும் புரியாது!
வெளிச்சம் மறைத்த திரைச்சீலை
வெட்கத்தில் நடுங்கி அலைபாய
அனிச்சப்பூ என் தோள்மீது
ஆனந்த அவஸ்தையில் தலை சாய
ஒரு நொடிக்குள்ளே அண்டமெல்லாம்
ஒடுங்கிப் போனது நமக்குள்ளே
‘சரசர’வென்று ஒரு வேகம்
சீறியெழுந்தது எனக்குள்ளே
உரசிய உதடுகள் தீப்பிடிக்க
உள்ளே அமுதம் ஊற்றெடுக்க
எரிந்து தணிந்த வனம் போல
எத்தனை நேரம் கனன்றிருக்க?
புதுமழை தீண்டிய பூமியைப்போல் – உன்
பூந்தளிர் மேனி சிலிர்த்ததென்ன
மதுமழை ஆடிய தேனீயைப்போல்
மன்மத சிறகுகள் முளைத்ததென்ன!
அரையிருள் மூடிய அந்தியிலே
ஆட்டி வைத்தது ஆவேசம்!
கரைந்து கலந்து இமைமூட – என்
கண்களுக்குள்ளே ஆகாசம்!
வீணையின் உறையை நீக்கிவைத்து – என்
விரல்கள் சுருதி கூட்டியதே
ஆனந்த ஸ்வரங்கள் பிறந்துவந்து
ஆயிரம் ஜாலங்கள் காட்டியதே!
ரகசிய ஊற்றுகள் திறந்துகொண்டு – என்
ரசனைக்கு அமுதம் பாய்ச்சியதே
அதிசயம் செதுக்கிய மேனியெங்கும் – என்
ஆர்வம் அலைந்து பார்க்கிறதே!
பூமி புதிதாய்த் துலங்கியதே – அடி
பூக்களின் பாஷை விளங்கியதே
காமக் கடலில் குடைந்தாடி – மனம்
காதல் கரைக்குத் திரும்பியதே!
நித்திலம் இழைத்த வழவழப்பில் – நீ
நெகிழ்ந்து கொடுத்த கதகதப்பில்
எத்தனை நேரம் கிடந்தாலும் – மனம்
இன்னும் இன்னும் என்கிறதே!
விடை தெரிந்தாலும் இளமையிங்கே
விளங்க முடியா விடுகதைதான்!
உடல்களின் பாஷை கடந்தாலும்
உயிருக்குக் காதல் தொடர்கதைதான்!
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…