வழிநடைப் பயணத்தின் நிழற்குடைகள்
வாழ்க்கை முழுவதும் வருவதில்லை
வழியில் பார்க்க நேர்ந்ததென்று
விட்டுச் செல்லவும் முடிவதில்லை!
தனித்து நிற்கும் குடைகளுக்கும்
துணையின் தேவை இருக்கிறது!
தயக்கம் தடுக்கும் காரணத்தால்
தனிமையில் வாழ்க்கை கழிகிறது!
பாதையும் பயணமும் முக்கியமா?
பாதியில் பார்த்தவை சரிவருமா?
ஏதும் புரியாக் குழப்பத்திலே
ஏனோ உள்மனம் அலைகிறது!
முடிந்த வரைக்கும் இருந்துவிட்டு
மெதுவாய் நகர நினைக்கிறது:
கடந்துபோகும் நேரத்திலே
கண்கள் குடையை அளக்கிறது!
குடையின் தலைமேல் வெய்யில்விழும்
கடக்கும் பறவையின் எச்சம் விழும்
‘அடடா’ என நின்று பார்த்தாலே
அன்பு கிடைத்ததில் குடைகள் அழும்!
அந்தப் பரிவின் சுகம் போதும்
அடுத்த கோடையைத் தாங்கி நிற்கும்;
கொஞ்ச காலம் கழிந்ததுமே
மறுபடி அன்பிற்கு ஏங்கி நிற்கும்!
நிலைபேறில்லையே நிழற்குடைக்கு
நீண்ட கம்பியில் துருவேறும்
வழி செல்லும் வாகனம் மோதியதில்
வளைந்து நசுங்கி உருமாறும்!
காலம் கடந்து போகையிலே
குடையும் பாவம் பழசாகும்;
யாரும் ஒதுங்க வாராத
ஏக்கத்தில் ஒருநாள் குடைசாயும்!
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…