காலம் என்கிற சித்திரக்காரனின்
கைவசம் உள்ளது தூரிகை – அது
காதல் என்கிற சித்திரம் தீட்டிடத்
தேவையெல்லாம் ஒரு நாழிகை!
அடிமனம் என்கிற திரைச்சீலை மேல்
அந்தச் சித்திரம் தோன்றலாம் – ஒரு
முடிவில்லாத வடிவத் தொடராய்
மோகப் புனைவுகள் நீளலாம்!
பருவங்கள் கடந்த பரவசம் காதல்
பழைய இலக்கணம் மீறலாம் – அது
வருவதும் போவதும் நம்வசம் இல்லை
வயதுகள் கடந்தும் பூக்கலாம்!
உனக்குள் பூத்த ஒற்றைப் பூவினை
ஒளித்து வைக்கவா போகிறாய்-? – அது
எனக்குள் மலர்த்திய கவிதைகள் ஆயிரம்
என்றைக்கு நீவந்து பார்க்கிறாய்?
தொலைவில் ஒளிரும் நிலவே நீயென்
தூக்கம் திருடிப் போகிறாய் – ஒரு
துளியளவேனும் தூக்கம் வந்தால்
உயிருள்ள கனவாய் ஆகிறாய்!
மரபுகள் உடைக்கும் மந்திரப் பொழுதில்
மலரே அருகே வந்திடு – என்
இரவுகள் எரிக்கும் சூரிய நிலவே
என்னை உனக்குத் தந்திடு!
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…