காமக் கடலலைகள் காதல் முகிலாகி
பூமி முழுவதுமே பூத்தூவும் – ஆம் நெஞ்சே!
வேகும் தினவெல்லாம் வெந்து தணிந்திருக்கும்
போகம் அலுத்துவிட்ட போது.

வீட்டுச் சிறைக்குள் வெதும்பும் குருவிக்குக்
காட்டுச் சிறகு கொடுத்ததுமே – பாட்டிசைத்து
விண்ணில் பறந்தோடி வெண்ணிலவின் மீதேறி
மின்னல் இரையெடுக்கு மோ.

அழுக்கு மனதின் அணைக்கட்டு தாண்டி
வழுக்கி நழுவி வெளியேறி – சழக்கருடன்
போராடி, மேனி பழுதாகி, ஆழ்கடலில்
நீராட வந்த நதி.

நீர்குடித்து & வெய்யில் நலங்குடித்து – மெல்லவே
வேர்பிடிக்கப் போகும் விதைப்பையை – நீகிழித்துப்
பார்த்தால் விருட்சமா பார்ப்பாய்? பொறுமையின்றி
வாராது வெற்றிக் கனி.
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *