என்னளவில் நான் சுதந்திரமானவன்;
துயரம்-மகிழ்ச்சி-தொடமுடியாத
உயரமென் உயரம்; உலகை முழுதாய்
அள்ளிக் கொள்கிற அகலமென் இதயம்;

நட்சத்திரங்களின் இருப்பை, மறைவை,
நிலவின் நீண்ட பயண வலியை,
இரவு நேரக் காற்றின் இசையை,
இருட்டு முதல்முதல் ஏற்படும் திசையை,
கணக்கில் வைக்கிற கவிதைகள் எனது;

உலக நதிகளை ஒரு துளியாக்கிப்
பருகக் கொடுப்பதென் பொழுது போக்கு;
வரைபடம் கடந்த வெளிகளில் எனது
புதிய உலகம் விதை கொண்டுள்ளது;

கால்நடையாய் நான் போகிற திசைகளில்
புதிய செடிகள் பூக்களை மலர்த்தும்
விமானத்தில் நான் ஏறியமர்ந்ததும்
ஆகாயத்தில் வானவில் முளைக்கும் – என்
எழுத்தில் புதிதாய்க் கற்பனை உதித்தால்
தூங்கும் குழந்தைகள் தாமாய்ச் சிரிக்கும்;

என் கவிதைகளை வாங்குவோர் வரிசையில்
கடைசி ஆளாய்க் கடவுள் நிற்கிறார்.

மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *