(2003ல் திருக்கோவலூர் கபிலர் விழாவில் வாசித்த கவிதை. கவியரங்கத் தலைவர் சொ.சொ.மீ. சுந்தரம்)
மகாராஷ்டிரத்தின் மகளாய்ப் பிறந்தாய்!
கர்நாடகத்தில் கால் வைத்துக் கடந்தாய்!
ஆந்திர வெளிகளில் ஆடித் திரிந்தாய்!
விரிகுடாக் கடலில் விரும்பிக் கலந்தாய்!
நதிகளின் நீயரு ரதியெனச் சிறந்தாய்!
தமிழ் மண்ணை மட்டும் ஏனடி மறந்தாய்!
துச்சாதனன் அன்று துகிலுரிய முயலுகையில்
அச்சோ கிருஷ்ணா என அலறினாள் பாஞ்சாலி!
பச்சை வயல் பெண்ணின் பசுமைத் துகில் பிடித்து
பஞ்சம் உரிகிறதே! பாய்ந்து வரவில்லையா நீ!
ஆந்திர மாநிலத்தில் அடிக்கடி நீ வெறி கொண்டு
பாய்ந்து புறப்பட்டுப் பலிகொண்டாய் உயிர்களை
சாந்த சொரூபியாய் சீரடைய வேண்டுமென்றால்
தாய்போல் தழுவிடவா தமிழ் நாட்டுப் பயிர்களை!
ஆந்திராவைத் தாண்டிவந்தால் அதில் தவறு கிடையாது!
ஆற்றுக்கும் காற்றுக்கும் எல்லைகள் இங்கேது?
வெய்யில் வந்தாலும் உயிர்சேதம்
வெள்ளம் வந்தாலும் உயிர்சேதம்
அய்யோ ஆந்திரம் பரிதாபம்
அப்துல் கலாமுக்கும் அதில் கோபம்!
கிருஷ்ணா உனது நீர்க்கோலம்
கரையைக் கடந்தால் அலங்கோலம்!
விரிகுடாவை மறந்து விட்டு – நீ
வந்து சேர்வது எக்காலம்?
தெலுங்கு கங்கை வருவதெல்லாம்
தீர்ந்து போன பொய்தானா?
கலங்கி நிற்கும் தமிழருக்கு – அடி
நீயும் கானல் நீர் தானா?
கிருஷ்ணன் பெயரைச் சுமந்தாயே
கருணை இல்லையா மனதோடு?
கிருஷ்ணா எனும் பேர் இருந்தாலே
தண்ணீர் தருவதில் தகராறு!
நதிகள் பாய மறுத்து விட்டால்
எதுவும் இங்கே நிகழாதே
நதிகளின் வேலை நிறுத்தத்துக்கு
எஸ்மா சட்டம் கிடையாதே?
காலில் சதங்கை முழங்கிவர
கைகளை நதிகள் சேர்த்துக் கொண்டால்
பாலும் தேனும் ஓடாதா
பாரதம் புதுமைகள் காணாதா!
மகாராஷ்டிரத்து மகள் தானே
தமிழகம் வர ஏன் ஆசையில்லை?
ஆந்திரா உனக்கு அப்பனல்ல
அதனால் அனுமதி தேவையில்லை!
சுழித்துக் கிளம்பி வா கிருஷ்ணா – இது
ஏங்கும் தமிழர் எதிர்பார்ப்பு
மலட்டு வயல்களுக் கெல்லாமே – நீ
மனது வைத்தால் வளைகாப்பு!
கங்கை காவிரி இணைப்பெல்லாம்
காலம் காலமாய்த் திட்டத்தில்;
இந்திய நதிநீர் இணைப்பெல்லாம்
இந்திய அரசியல் சட்டத்தில்;
திட்டம் சட்டம் பலிக்குமென்ற
தமிழனின் கனவுகள் விட்டத்தில்;
பட்ட சிரமங்கள் போதுமடி
பாய்ந்து வா நீ பக்கத்தில்!
தவங்கள் பலிக்கும் திருநாளில்
தமிழகம் நோக்கி அவள் வருவாள்;
கபிலன் பாட்டுக்கு ஒரு நாளில்
கிருஷ்ணா நதிமகள் நடமிடுவாள்!
நம்பிக்கை அலைகள் வீசட்டும்
நாட்டிய நதிகள் பேசட்டும்!
நம்பி இருப்போம் தோழர்களே
நாளை நன்மைகள் சேரட்டும்!
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…