(விழுப்புரம் கம்பன் விழாக் கவியரங்கில் தலைமையேற்றுப் பாடிய கவிதை)
அன்றும் இன்றும் நடப்பதெல்லாம்
ஆம். எங்கள் கம்பன் சொன்ன கதை.
அங்கும் இங்குமாய் மாறுதல்கள்
ஆனால் அடிப்படை மாறவில்லை.
பிரியம் மணக்கும் காதல்முன்
பெரிய தனுசொரு பொருட்டில்லை
அரசகுமாரன் மட்டுமல்ல,
ஆண்டியின் மகனும் விலக்கில்லை
மந்தரை சூழ்ச்சிகள் செய்வதனால்
மகுடங்கள் உருள்வதும் நிற்கவில்லை.
தந்திரம் வல்ல தலைவர்களும் & இதைத்
தடுக்கிற வழிகள் கற்கவில்லை.
அரண்மனைக்குள்ளே மோதல்கள்
அடுத்தவன் மனை மேல் காதல்கள்
அனுதினம் எங்கள் ஏட்டினிலே
அதுதான் கம்பன் பாட்டினிலே
கற்பின் கனலியை சிறையெடுத்துக்
காவலில் வைத்தான் தொடவில்லை
கற்புள்ள பெண்கள் வந்தாலோ
காவல் நிலையங்கள் விடவில்லை
வீடணன் அரசியல் வெல்கிறது
வீடணன் நேர்மை இங்கு இல்லை
கூடாரங்கள் மாறுகையில்
கைமேல் கிடைக்குது நல்ல விலை.
கும்பகர்ணத் தூக்கத்தில்
அரசுக் கோப்புகள் ஆழ்ந்திருக்கும்.
கொம்புகள் முரசுகள் கொட்டாதீர்
காசு கொடுத்தால் கண் திறக்கும்
வேடதாரி முனிவர்களின்
வருகையில் திணறுது ஆன்மீகம்.
பாடிப் பார்த்து மூடிவைக்க
பழைய கதையல்ல வான்மீகம்.
சினிமா என்பது வேறல்ல,
சூர்ப்பனகையின் ஜாலங்கள்
அரிதாரங்கள் களைந்துவிட்டால்
அத்தனையும் பொய்வேடங்கள்.
பரம்பரை ஆட்சி நடந்தாலும்
பாதுகையாட்சி நடந்தாலும்,
சிறிதும் கவலையில்லாமல்
செக்குமாடாய்ப் பொதுஜனங்கள்.
சகோதரன் எனும் சொல் கேட்டாலே
சட்டென்று கரைவான் ஸ்ரீராமன்.
அவனது அம்பை ஏவி விட்டே
அண்ணனைக் கொன்றான் சுக்ரீவன்.
முரண்பாடுகளின் கூட்டணியில்
மூழ்கித் தவிக்குது தாய்நாடு.
உடனிருப்போனே உயிர்குடிப்பான்
உலகத்தில் இதுதான் வரலாறு;
கதை மாந்தர்கள் மாறிவிட்டார்
காவியம் இன்றும் நடக்கிறது.
வருடங்கள் பலவும் கழிந்துமென்ன
கம்பனின் வார்த்தை பலிக்கிறது.
மான்களுக்கும் கோபம் வரும்… புத்தகத்திலிருந்து…