(சித்திரைத் திருநாளில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சிக் கவியரங்கில் கவிப்பேரரசு வைரமுத்து தலைமையில் பாடிய கவிதை. உடன்பாடிய கவிஞர்கள் – கபிலன், புகழேந்தி, ஆண்டாள் பிரியதர்ஷினி, கனிமொழி)
அன்றொரு நாளெங்கள் வள்ளுவக் கிழவனின்
அகந்தனில் புகுந்தவள் யார்?
அவன்பின்னர் இளங்கோ வழங்கிய சிலம்பினில்
அறங்கள் மொழிந்தது யார்?
கந்தல் உடை கொண்ட சங்கப் புலவனின்
நெஞ்சினில் எழுந்தவள் யார்? அவன்
கவிதைகள் முன்னர் சிவிகையும் மகுடமும்
பணிந்திடச் செய்தவள் யார்?
முந்துபல் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகள்
முன்னர் பிறந்தவள் யார்?
முன்னர் பிறந்துமே கன்னி வடிவினில்
நின்று பொலிந்தவள் யார்?
சிந்தை நிறைந்திடும் செந்தமிழே இங்கு
முதியவள் நீதானே!
முதுமையின் சுவடே வெளித்தெரியாத
புதியவள் நீதானே!
பரணிகள் எழுதிய புலவர்தம் கவிதைகள்
பரண்களில் கிடந்தாலும்,
புலமையின் நயங்களை உணர்ந்தவர் வழங்கிய
உரைகள் மறைந்தாலும்,
முரண்தொடை உருவகம் உவமைகள் எல்லாம்
மறந்து கழிந்தாலும்,
மனிதனின் அவசர யுகந்தனில் பழமைகள்
மூர்ச்சை அடைந்தாலும்,
அறிவியல் கவிஞர்கள் எழுதுகோல் மறந்தொரு
கணிணிமுன் அமர்ந்தாலும்
அவரவர் கவிதைகள் அறிந்திடத் தனித்தனி
வலைதளம் திறந்தாலும்
தகுதகு தந்திமி தகுதகு தந்திமி
சந்தங்கள் சுகந்தானே!
தலைமுறை மாறிடும் பொழுதிலும் எங்கள்
தமிழே… நலந்தானே!
ஆதியிலே தை தான் தமிழருக்கு முதல்மாதம்
பாதியில்தான் சித்திரையைப் போற்றிக் கொண்டாடுகிறோம்!
உத்தமியாம் தைமகள்தான் உண்மையிலே தாய்நமக்கு;
சித்திரையாள் என்பவள், ஒரு சித்திதான்! நண்பர்களே!
சித்திரையாள் நமக்கு சித்தி என்பதாலேதான்
கத்திரி வெய்யிலுடன் கடுகடுப்பாய் வருகின்றாள்;
கடுகடுப்பாய் வருபவளைக் கவிஞரெல்லாம் கூடிக்
கலகலப்பாய் வரவேற்கும் கவியரங்க மேடையிது!
எல்லாம் சரிதான்; எனக்குள் ஓர் ஆதங்கம்;
மிக மூத்த கவிஞரெல்லாம் மேடையிலே இருக்க,
“முதுமை” எனும் தலைப்பையிந்த இளைஞ-னுக்கேன் தந்தீர்கள்?
மேடையிலே பாருங்கள்… மிக மூத்த கவிஞர்கள்!
சங்க காலத்துக் கபிலன்! கம்பர் காலத்துப் புகழேந்தி!
ஆழ்வார் காலத்து ஆண்டாள்! அவர்கள் பாடிய கனிமொழி!
இத்தனை மூத்தவர்கள் இந்த அரங்கில் இருக்க
முத்தையாவுக்கு ஏன் முதுமை எனும் தலைப்பு?
இத்தனை பருவங்கள் வாழ்வில் இருந்தென்ன?
அத்தனைக்கும் முதுமைதான் சிகரம்;
குழந்தைப் பருவத்தில் அறியாமை – தயக்கம்;
இளமையில் பாவம் புரியாத மயக்கம்;
மணமாகும் முன்பு கனவின் தளும்பல்;
மணமான பின்போ விரக்திப் புலம்பல்;
அதுவரை மனிதன் தேங்கிய குட்டை;
முதுமைதான் வாழ்க்கையின் முகவரி அட்டை;
சீனன் ஒருவன் பழமொழி சொன்னான்;
முதுமை நோய்களின் துறைமுகம் என்று;
ஞானத் தமிழன் புதுமொழி சொன்னான்,
முதுமை வாழ்க்கையின் அறிமுகம் என்று!
தோழர்கள் கூட நோய்கள் போலத்
தொல்லை கொடுப்பது நடுத்தர வயதில்;
நோய்கள் கூடத் தோழர்கள் ஆகித்
துணையாய் இருப்பது முதுமைப் பொழுதில்;
ரத்த அழுத்தம், சர்க்கரை எல்லாம்
நீண்ட கால நண்பர்கள் போல;
உரிமையோடு வந்தமர்வார்கள்
புறப்படச் சொன்னால் போய்விடுவார்கள்;
போவதும் வருவதுமாய் இந்த உறவு
சாவது வரையில் தொடரும் என்கிற
ஞானம் பிறப்பது முதுமையிலேதான்!
கண்கள் நடத்தும் ஒத்துழையாமை –
காதுகள் வைக்கும் கோரிக்கை முழக்கம் –
வாயும் வயிறும் கலந்து பேசி
அறிவிக்கின்ற உண்ணா விரதம்,
இதர புலன்கள் இணைந்து நடத்தும்
உள்ளிருப்பு வேலை நிறுத்தம்
இத்தனை சிரமமும் இயல்பாய் எண்ணி
மூச்சு முடியும் நாள்வரை சமரசப்
பேச்சு வார்த்தை நடத்தும் முதுமை.
முதுமைப்பருவமே முழுமைப்பருவம்;
புதிராய் இருந்த வாழ்க்கை புரியும்;
சதையும் தோலும் சுருங்கிக் கிடக்கும்.
இதயம் கடல்போல் விரிந்து கிடக்கும்!
வாழ்க்கை அனுபவம் வாங்கி வாங்கி
வைரம் பாய்ந்து கிடக்கிற மனசு;
பாக்கு சிக்கிய பல்லிடுக்குகளை
நாக்கு நுனியால் துழாவித் துழாவி
ஞாபகங்களை மீட்கிற வயசு;
காலையில் பிரித்த ஹிண்டு பேப்பரை
மாலை வரையில் மனப்பாடம் செய்து
தெரு விளக்கு எரியாதது பற்றி
ஆசிரியருக்குக் கடிதம் எழுதி
ஆஸ்திக சமாஜத்தில் புண்ணியம்தேடி
ஆனந்தத்தில் லயிக்கும் மனசு;
வீட்டுக் கதையை விடுங்கள் – கொஞ்சம்
நாட்டு நிலையை நினைத்துப் பாருங்கள்;
அறிவியல் புதுப்புது ஆயுதம் தரலாம்,
அணுகுண்டு வெடிகுண்டு ஆயிரம் வரலாம்,
காந்தி என்கிற பொக்கைவாய்க் கிழவனின்
புன்னகை போலோர் ஆயுதம் உண்டா?
தந்தை பெரியார் கைத்தடி போலத்
தீமையை விரட்டக் கருவிதான் உண்டா?
அப்துல் கலாமில் ஆரம்பமாகி
அள்ளிமுடிந்த மதுரைக்கிழவி
சின்னப்பிள்ளை வரையில் பார்த்தால்
முதுமையில் நிகழ்வதே முழுமைச் சாதனை.
வாழ்க்கைக் கடலின் கரையோரத்தில்
விரும்பிப் பாய்ச்சிய நங்கூரம்;
கரையையும் பார்த்துக் கடலையும் பார்த்து
முதிர்ந்த மனதில் கம்பீரம்;
அசையும் பற்கள்; உதிரும் தலைமுடி,
அடிக்கடி இருமல் ஜலதோஷம்;
அசையாச் சொத்தாய் மனதில் பக்குவம்
அதனால் தினம்தினம் சந்தோஷம்!
காசுக்காகப் பலவும் பேசிக்
கழிந்தது வாழ்க்கை நடுவயதில்;
வேஷமில்லாத நேசம் காட்ட
வேளை வந்தது முதுமையினில்;
வீரம் காட்டி வெற்றிகள் குவிக்க
வேகப்பாய்ச்சல் இளமையிலே;
பேரன்பேத்தி குத்துச் சண்டையில்
தோற்கும் மகிழ்ச்சி முதுமையிலே;
இரவிலும் தூக்கம், பகலிலும் தூக்கம்,
இதுவும் ஒருவகைக் குழந்தைநிலை;
உறவுகள் பார்த்தால் மனதில் மகிழ்ச்சி
ஊற்றாய்ப் பொங்கும் இளமைநிலை;
ஊக்கம் என்கிற ஊட்டம் இருந்தால்
சோகச் சோகை தொடுவதில்லை;
வாழத் தெரிந்த முதியவர் முகத்தில்
வருத்த ரேகை படிவதில்லை;
முதியோர் இல்லம் நோக்கி மகன்கள்
அனுப்பி வைத்தாலும் கவலையில்லை;
புதியதோர் உலகம் அங்கே உண்டு
ஒருவருக்கொருவர் உதவி நிலை;
ஈட்டிய அனுபவக் களஞ்சியம் முதுமை
இதுபோல் கல்வி ஏதுமில்லை;
வீட்டுக்கு வீடு முதியவர் இருந்தால்
தனியாய் நூலகம் தேவையில்லை;
மனிதனுக்குள்ளே இருக்கும் குழந்தை
மீண்டும் பிறப்பது முதுமையில்தான்!
மனிதா இதனை உணரத் தெரிந்தால்
முழுதாய் மகிழ்ச்சி முதுமையில் தான்!
உள்ளே இருக்கும் குழந்தையை உன்னால்
ஒன்றும் செய்ய முடியாது – அட
எல்லாம் தெரிந்தும் குழந்தையாகிற
இன்பம் முதுமைதான் வேறேது!
(மான்களுக்கும் கோபம் வரும் – நூலிலிருந்து)