(24.07.2005 ஈரோடு சி.கே.கே. அறக்கட்டளை 27ஆவது ஆண்டுவிழாக் கவியரங்கம் – தலைமை கவியரசர் இளந்தேவன்)

கவியரங்கில் என் தலைப்பு வரும் முன்னால்
கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டு வருகிறேன்
ஓர வஞ்சனை ஒன்று செய்தீர்களே – இது
நீதியா என்று நின்று கேட்கிறேன்.

அன்பு, புன்னகை, கண்ணீர், அழகு,
பார்வை என்று பாடுவதற்காக
அரங்கில் உள்ளனர் அருமைக் கவிஞர்கள்
அவரவர் கைகளில் அவரவர் ஆயுதம்!
நான் மட்டும் இங்கே நிராயுதபாணியாய்
நிற்கின்றேனே நியாயமா இது!

கவிதைத் தாள்களைக் கையிலெடுத்ததும்
மௌனம் என்கிற ஆயுதம் தொலைந்தது!

இங்கே இருக்கும் நண்பர்கள் கைகளில்
இருப்பவை எல்லாம் அகிம்சை ஆயுதங்கள்
அகிம்சையா? இம்சையா? அறியமுடியாத
மர்ம ஆயுதம் மௌனம் மட்டும்தான்!

அணுஆயுதங்களைப் பறிமுதல் செய்யலாம்
கருவிகள் என்றால் கைப்பற்றி விடலாம்
பறிமுதல் செய்யப்பட முடியாத
மகத்தான ஆயுதம் மௌனம் ஒன்றுதான்!
அழித்த பின்னாலும் மிச்சமிருக்கிற
அபூர்வ ஆயுதம் மௌனம் மட்டும்தான்!

பிரபஞ்சம் பேசிய முதல்மொழி மௌனம்
பூக்களுக்கெல்லாம் பொதுமொழி மௌனம்
நுரைமொழி பேசும் அலைகளைக் கழித்தால்
நடுக்கடல் பேசும் தாய்மொழி மௌனம்
விரல்கள் வந்து வருடும் வரைக்கும்
வீணைகள் பேசும் இசைமொழி மௌனம்
திரைச்சீலை மேல் தூரிகை பட்டதும்
வண்ணங்கள் பேசும் தனிமொழி மௌனம்!

காதல் என்கிற போர்க்களம் புகுந்தால்
கண்களின் ஆயுதம் மௌனம்
ஊடல் வந்ததை உணர்த்த நினைத்தால்
பெண்களின் ஆயுதம் மௌனம்
பாடல் பிறக்கும் விநாடி வரைக்கும்
சொல்லின் ஆயுதம் மௌனம்
வேடனின் அம்பு விடைபெற்ற பின்னால்
வில்லின் ஆயுதம் மௌனம்!

காவி உடுத்திய முனிவர்கள் பேசும்
கடவுளின் பாஷை மௌனம்
ஆயிரம் யுகமாய் பூமிப்பந்து
சுழல்கிற ஓசை மௌனம்
பாவி மனிதன் பேசிப் பேசியே
தொலைத்த புதையல் மௌனம்
வாழ்க்கையின் அர்த்தம் தேடிய புத்தன்
வாங்கிய ஞானம் மௌனம்!

பிரியாத இதழ்கள் பிரியம் சொல்வதால்
மௌனம் ஒருவகை முத்தமாகும்
அமைதியாய் இருந்தே எதிரியைக் கொல்வதால்
மௌனம் ஒருவகை யுத்தமாகும்
உற்றுக்கேட்கையில் உண்மை சொல்வதால்
மௌனம் ஒருவகை சத்தமாகும்
மர்ம ரகசியம் மறைத்து வைப்பதால்
மௌனம் ஒருவகைக் குற்றமாகும்!

பேச மறுக்கிற காதலி மௌனம்
போர்க்காலத்தில் பிரகடனம் போன்றது
பேச மறுக்கிற குழந்தையின் மௌனம்
கடவுள் கொடுக்கின்ற சாபம் போன்றது!
பேச மறுக்கிற நண்பனின் மௌனம்
ஊமைக்காயத்தின் உள்வலி போன்றது!
பேச மறுக்கிற எதிரியின் மௌனம்
பயங்கரமான கனவைப் போன்றது!

வகுப்பாசிரியர் கேள்வி கேட்டால்
மாணவனுக்கு மௌனம் ஆயுதம்!
தொகுதி மக்கள் கேள்வி கேட்டால்
தலைவர்களுக்கு மௌனம் ஆயுதம்!
அதிக இடங்களைக் கூட்டணி கேட்டால்
அரசியல்வாதிக்கு மௌனம் ஆயுதம்!
பதவிச் சண்டையில் ஆட்சிகள் கவிழ்ந்தால்
பாரதத் தாய்க்கு மௌனம் ஆயுதம்!

ஊமையாய் இருப்பதும் மௌனமாய் இருப்பதும்
உண்மையில் பார்த்தால் வேறு வேறுதான்!
வார்த்தைகள் இழந்த ஊமையின் பதற்றம்
ஒலியாய் சைகையாய் வலியுடன் வெளிப்படும்
வார்த்தைகள் கடந்த ஞானியின் மௌனம்
தவமாய் சிவமாய் அருளாய் வெளிப்படும்!

சில்லறைக் காசுகள் சலசலக்கையிலே
மௌனம் காக்கும் காசோலை மாதிரி
கல்லறை மனிதன் படபடக்கையிலே
கடவுள் மட்டும் மௌனமாயிருக்கிறார்!

வார்த்தையின் பின்னே ஓடும் வரைக்கும்
வாழ்க்கையின் அர்த்தம் விளங்குவதில்லை;
மவுனம் தனக்குள் மலர்ந்தபின் மனிதன்
மறுபடி பூமிக்கு வருவதுமில்லை!

வாழ்க்கையோடு போரிடும் வேளையில்
மவுனம் நமக்குக் கவசம் போன்றது!
மனித வாழ்க்கை கோபுரம் என்றால்
மவுனம் அதிலுள்ள கலசம் போன்றது!

கவனம் இல்லா வார்த்தைகளில் வரும்
கலகம் அடக்க முடியாது!
சபலம் கொண்டு உளறித் திரிந்தால்
மனது நமக்குப் படியாது!
எதையும் பேசும் உதடுகள் இருந்தால்
எந்த வெற்றியும் நிகழாது!
மௌனம் என்கிற ஆயுதம் இருந்தால்
மண்ணில் எதிரிகள் கிடையாது!

காசு வருகையில் மௌனமாயிருங்கள்
தண்டச் செலவுகள் தவிர்க்கலாம்!
சோதனை வருகையில் மௌனமாயிருங்கள்
நிச்சயம் அதனைக் கடக்கலாம்!
தோல்வி வருகையில் மௌனமாயிருங்கள்
அடுத்த முயற்சியில் ஜெயிக்கலாம்!
வெற்றி வருகையில் மௌனமாயிருங்கள்
பக்குவம் அதிலே பிறக்கலாம்!

மோதல் வருகையில் மௌனமாய் இருங்கள்
கோர்ட்டில்லாமல் ஜெயிக்கலாம்!
சோகம் வருகையில் மௌனமாய் இருங்கள்
காலம் கடந்தால் மறக்கலாம்!
பாகம் பிரிக்கையில் மௌனமாய் இருங்கள்
குடும்பப் பிரச்சினை தீர்க்கலாம்!
பாகிஸ்தானில் மௌனமாய் இருங்கள்
கட்சிப் பிரச்சினை தீர்க்கலாம்!

கோபம் வருகையில் மௌனமாய் இருங்கள்
குத்துவெட்டுகள் தடுக்கலாம்!
ஆசை வருகையில் மௌனமாய் இருங்கள்
ஆயிரம் பிரச்சினை தவிர்க்கலாம்!
காதல் வருகையில் மௌனமாய் இருங்கள்
நிம்மதியாக இருக்கலாம்!
சாவு வருகையில் மௌனமாய் இருங்கள்
சாவை வென்று நிலைக்கலாம்!

(மான்களுக்கும் கோபம் வரும் – நூலிலிருந்து)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *