(1997இல் தஞ்சையில் நடந்த சதயவிழாக் கவியரங்கில் வாசித்த கவிதை. தலைமை – கவிஞர் சிற்பி)
காரிகையாள் காவிரியின் அலைமுத்தங்கள்
கன்னத்தில் படிவதனால் சிவந்த பூமி;
தாரகைகள் நடுவிலொரு நிலவைப் போல
தலைநிமிரும் கலையழகில் சிறந்த பூமி;
தூரிகைகள் தீண்டாத வண்ணம் மின்னும்
தோகைமயில் மங்கையர்கள் நிறைந்த பூமி;
பேரலைகள் சமுத்திரத்தில் உளநாள் மட்டும்
பேர்சொல்லும் ராஜராஜன் நடந்த பூமி!
தஞ்சமென வருவார்க்கு இடம் கொடுத்துத்
தஞ்சையெனப் பெயர் பெற்ற நகரந்தன்னில்
விஞ்சுபுகழ் மாமன்னன் ராஜராஜன்
விரிந்த புகழ் பேசுகின்ற கவியரங்கம்!
நஞ்சையிலே குலுங்கிநிற்கும் கதிர்கள் போல
நளினமுடன் சலசலக்கும் மலர்கள் போலக்
கொஞ்சுதமிழ் கேட்கின்ற வேட்கையோடு
கூடியுள்ள கூட்டத்தை வணங்குகிறேன்!
தடைபோட்டுத் தடைபோட்டு வைத்தால் கூடத்
தாங்காத காதலுடன் காவிரிப் பெண்
நடைபோட்டு வந்ததெல்லாம் – சதய நாளில்
நாயகனாம் சோழனவன் புகழ் கேட்கத்தான்!
புடம்போட்ட தங்கம்போல் சரித்திரத்தில்
புதுவெளிச்சம் பரப்புமவன் பெருமை சொல்ல
முழம்போட்ட தஞ்சாவூர்க் கதம்பம் போல
மணம்வீசும் பாவலர்கள் மன்றம் வந்தார்!
யுத்தத்தில் மாற்றாரை ஜெயித்துக் கொண்டு
இணையின்றி ஆட்சியினை நடத்திக் கொண்டு
ரத்தத்தில் கலைவேட்கை நிறைத்துக் கொண்டு
ரத்தினமாய் மன்னரிடை ஜொலித்துக்கொண்டு
முத்தமிடும் காதலிபோல் உளிகள் யாவும்
மோகமுடன் கருங்கல்லில் மோதுகின்ற
சத்தத்தின் ஸ்வரங்கேட்டு ரசித்துக் கொண்டு
சரித்திரத்தைப் படைத்தவன்தான் ராஜராஜன்!
உறைவாளில் கரமொன்று படிந்திருக்கும்;
ஒருகரமோ கொடைவழங்கிச் சிவந்திருக்கும்!
குறையாத கருணைவிழி கனிந்திருக்கும்
குழைசெவிகள் இசைகேட்டுக் குழைந்திருக்கும்!
நிறைமனதோ சிவனடியில் பதிந்திருக்கும்
நிகரில்லாத் தமிழார்வம் நிறைந்திருக்கும்!
முறையான கற்பனையில் இப்படித்தான்
முகங்காட்டி முறுவலிப்பான் ராஜராஜன்!
கண்திறக்கும் பூக்களினைக் கரிய வண்டு
கண்டுகொண்டுத் தேனெடுத்துக் கொணர்தல்போலப்
பண்சுரக்கும் திருமுறையாம் அமுதந்தன்னைப்
பூட்டுடைத்து, மீட்டெடுத்த புரட்சி வேந்தன்!
எண்ணிறந்த கலைகளுக்கு நிழல் கொடுத்து
இதயத்தில் கலையார்வத் தழல் வளர்த்து
மண்ணிருக்கும் வரைநிலைக்கும் புகழ்படைத்து
மறையாமல் வாழுகின்றான் ராஜராஜன்!
சதயத்தில் உதயமான
சோழ வெண்ணிலவு – தீய
சதிசெய்யும் பகையைக் காயும்
சூரிய விழுது – சைவப்
பதிகங்கள் மீட்டு வந்த
புண்ணிய வடிவு – இன்றும்
இதயங்கள் தோறும் வாழும்
எழில் மன்னன் இராஜராஜன்!
தாயினும் இனியனாகத்
தஞ்சையை ஆட்சி செய்தான்
கோயிலில் எங்கும் எங்கும்
கலைநயக் காட்சி செய்தான்
தூயமுத்தமிழில் பல்லோர்
தலைநிற்கத் தேர்ச்சி செய்தான்
ஓய்விலாதுலகம் வாழ்த்த
உயர்ந்தவன் ராஜராஜன்!
சலங்கைகள் அதிரும் ஓசை
சிற்றுளி உரசும் ஓசை
பலவித வாத்தியங்கள்
பாங்குடன் முழங்கும் ஓசை
நலந்தரும் தேவாரங்கள்
நாவாரப் பயிலும் ஓசை
கலவையாய் ஒலிக்கச் செய்தான்
கலைமன்னன் ராஜராஜன்!
தாண்டக வேந்தரான
திருநாவுக்கரசர் தம்மைத்
தூண்டுமோர் விளக்காய்நல்ல
தமக்கையார் வந்தாற்போல
தான்மிக உயர்வைக் காண,
தமக்கையாம் குந்த வைதன்
மாண்புயர் சொல்லைக்கேட்டு
மேம்பட்டான் ராஜராஜன்!
புவனமே மகிழும் வண்ணம்
புண்ணியக் கொடைகள் தந்தான்!
தவம்செய்யும் துறவிக்கெல்லாம்
தகுந்தநல் பெருமை தந்தான்;
நவநவக் கலைகள் தம்மை
நாளுமே வளர்ப்பவர்க்கு
நிவந்தங்கள் நிறையத் தந்தான்
நிகரில்லா ராஜராஜன்!
சாஸ்தீரிய சங்கீதத்தின்
சரியான மூலம், இங்கே
நேற்றுநம் தமிழர் கண்ட
நலமான பண்புகளாகும்;
ஊற்றெனப் பண்கள் பாட
உகப்பான திருமுறைகள்
ஆற்றலால் மீட்டெடுத்தான்
அருள்மன்னன் ராஜராஜன்!
திருமுறை மீண்ட தாலே
தமிழிசை மீளப் பெற்றோம்!
வரைமுறை செய்த தாலே
வரலாறும் அறியப் பெற்றோம்!
ஒருமுறை இருமுறை ஏன்
ஒருகோடி முறைகள் சொல்வோம்!
குறைவின்றித் தமிழ்க் கலைகள்
காத்தவன் ராஜராஜன்!
“தத்திமி திமிதோம்” என்று
தாண்டவம் ஆடுவாரும்
முத்தமிழ்த் திருமுறைகள்
மகிழ்வுடன் ஓதுவாரும்
வித்தக உளியால் கல்லில்
வியப்புகள் தேடுவாரும்
நித்தமும் தழைக்கும் வண்ணம்
நிழல்தந்தான் ராஜராஜன்!
ஆயிரம் ஆண்டுக் காலம்
ஆனபின்னாலும் இங்கே
மாபெரும் கலைகள் தம்மில்
மாமன்னன் வாழுகின்றான்!
நாமவன் பெருமை பேசி
நெஞ்சார்ந்த மகிழ்ச்சி கொள்வோம்!
பூமிபோல் நிலையாய் நிற்பான்
புகழ் மன்னன் ராஜராஜன்!
(மான்களுக்கும் கோபம் வரும் – நூலிலிருந்து)