என்னுடைய பந்தயம் எவரோடுமில்லை.
சமாதானம் வாங்கத்தான் மைதானம் வருகிறேன்.
மோது களங்களில் மலர்ச்செடி நடுகிறேன்.
நீதி மொழிகளின் போதனை மேடையாய்
சூது களங்களை மாற்றி விடுகிறேன்.
நடுவர்களேயில்லாத விளையாட்டில் இறங்குகிறேன்.
உதைபடும் பந்தை ஓடியெடுத்து
அரவணைக்கத்தான் ஆசை கொள்கிறேன்.
வெற்றிக் கோப்பை வேட்டையிலிருந்து
விலகி நின்று வேடிக்கை பார்க்கிறேன்.
ஆட்டம் முடிகையில், கூட்டம் கலைகையில்,
கோப்பைக ளெல்லாம் காலியாய்ப் போகையில்…
என்னிடம் மட்டும் எத்தனை இதயங்கள்!
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)