என்றைக்கேனும் பசுக்களின் தாய்மை
கன்றுகளோடு நின்றதுண்டா?
கன்றுகளை வெறும் காரணமாக்கி
அன்பைப் பொதுவாய் அளிப்பவை பசுக்கள்;
வைக்கோல் கன்றின் வக்கிரம் பொறுத்து
மடி சுரக்கின்ற மகத்துவம் போதுமே!
உயிர்கள் எதனையும் உதறிவிடுகிற
பயங்கர மூர்க்கம் பசுக்களுக்கில்லை:
புழுதியில் மலத்தில் புரள்கிற ஈக்கள்
முதுகில் அமர்ந்தால் மறுப்பதேயில்லை!
அன்பின் மௌனமாய் அமைதியின் கவிதையாய்,
மண்ணின் முகில்களாய் மலர்ந்தவை பசுக்கள்;
மலர்களுக்கிருக்கும் முட்களைப் போலவே
பசுக்களின் கொம்புகள் பொருத்தமாயில்லை!
(பொருந்தா உறுப்புகள் படைத்த கடவுளை
மலர்களும் பசுக்களும் மன்னித்தருளின)
தெய்வம் தேடும் ஆன்மா, பசுவென
சைவ சிந்தாந்தம் சொல்வதுண்மை!
முனிவர்கள் தவம் செய்து முயல்கிற கருணை
பசுக்களின் கண்களில் பெருகி வழியும்.
நெற்றியில் நீறு நிறையப் பேசினால்
புத்தியில் பசுவின் பெருந்தன்மை படியும்.
பசுக்களின் பார்வையில், பூமி முழுவதும்
பாலுக்கழுகின்ற கன்றாய்த் தெரியும்.
பசுக்களின் பார்வை மனிதனுக்கிருந்தால்
பூமி முழுவதும் பாலாய்ச் சொரியும்.
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)