வெள்ளைக் காகிதம் வைத்திருக்கிறேன் நான்.
ஆயிரமாயிரம் எழுத்துக்கள் எழுதியும்
இன்னும் வெள்ளையாய் இருக்குதக் காகிதம்.
உயில்கள், கவிதைகள், ரகசியக் குறிப்புகள்,
மிரட்டல் கடிதங்கள்கூட எழுதினேன்.
இறந்து போனவர்கள் எதிர்ப்பட்டபோது
எடுத்த பேட்டிகள் அதில்தானிருந்தன.
எத்தனை முறை நான் எழுதினாலும்
அத்தனை முறையும் அழிந்து போகிறது.
படித்துப் பார்த்த “பலான” விமர்சகர்
அமரத்துவம் மிக்க படைப்பென்று சொல்லிய
பாராட்டுச் சொல் தீரும் முன்பே
அமரத்தன்மை அடைந்தவ்வெழுத்து.
காலத்தால் அழியாத வரிகளைக்
காகிதம் அழிக்கும் கூத்தை என் சொல?
காகிதக் கொடுமை எல்லை மீறிட
குற்றப் பத்திரிகை ஒன்றை எழுதிக்
காவல்நிலையம் கொண்டு போயிருந்தேன்.
வெள்ளைக் காகிதம் தூக்கி வந்து
வேலையைக் கெடுப்பதாய்ச் சீறினார் காவலர்.
உங்களிடமாவது சொல்லலாமென்று
ஆதங்கத்துடன் எழுதிக் கொண்டிருக்கும்
இந்தக் கவிதை என்னவாகுமோ?
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)