“சர் சர் சர்” என உச்சந் தலையில்
சவரக் கத்தியின் சடுகுடு ஆட்டம்;
காய்ச்சல் காலத்து நேர்த்திக் கடன்தான்
முடியிறக்கத்தின் மூல காரணம்;
கொத்துக் கொத்தாய் மடியில் விழுந்த
கற்றை மயிர்களைக் கைகளில் அள்ளினேன்.
அக்கம் பக்கம் அனேகம் பேர்கள்
தத்தம் சிகையினைத் தத்தம் செய்தனர்.
இத்தனை குவியலும் இறைவனுக்கெதற்கு?
பக்கத்துவீட்டுப் பையனின் கேள்விக்கு
முன்னர் ஒரு முறை சொன்ன பதில்தான்
மனதுக்குள்ளே மறுபடி வந்தது;
“சாமி இதையெல்லாம் சொர்க்கத்தில் சேர்த்து
பூமியில் புதுசாப் பொறக்கப் போற
பாப்பாவுக்கெல்லாம் கொஞ்சம் கொஞ்சமா
வைச்சு வைச்சு வெளியே அனுப்புவார்”
சிறுவனின் கண்களில் சிலிர்த் வெளிச்சத்தில்
பிரபஞ்ச ரகசியம் புரிந்த பெருமிதம்;
போனவாரம்தான் பையனின் தாத்தா
மாரடைப்பினால் மரணமடைந்தார்.
தலைமுடி உதிர்ந்த தொண்டு கிழவரை
சிதையில் வைத்துச் சுட்டு மீண்டதும்,
பாட்டியிடம் போய்ப் பையன் சொன்னான்.
“தாத்தாவுக்குத் தலைமுடி வேணுமாம்.
சாமிகிட்டே போய் வாங்கீட்டு வருவார்.
சும்மா அழாதே, சளி பிடிச்சுக்கும்”
இன்றைக்கிரவு ஊர் திரும்பியதும்
என் தலை பார்த்தால் ‘ஏன்’ எனக் கேட்பான்.
தாத்தாவுக்குத் தருவதற்காக
சாமி என் தலை முடி கேட்டுப் பெற்றதாய்
சொன்னால் பையன் குஷியாய்ச் சிரிப்பான்.
தாத்தாவுக்குத் தலைமுடி கிடைப்பதாய்
அதற்குப்பிறகு அம்மா வயிற்றில்
தம்பிப் பாப்பாவாய் தாத்தா வருவதாய்
கற்பனைகளோடு தூங்கப் போவான்.
குழந்தைகள் மனதில் மரணமென்பது
கொஞ்ச கால வெளியூர்ப் பயணம்
என்கிற நம்பிக்கை நீடிப்பதற்கு
எனது பொய்கள் உதவினா லென்ன?
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)