ஒவ்வொரு நாளும் உன்னிடம் சொல்ல
ஏதேனும் தகவல்கள் என்னிடமிருக்கும்.
வைகறைப் பூக்களின் வெண்பளித் துளிகளாய்ச்
சில்லிடும் தகவல்கள் சேகரித்திருப்பேன்.
மலர்களைப் பற்றி, குழந்தைகள் பற்றி,
கனவுகள் பற்றி, கவிதைகள் பற்றி,
தலையணைக்குப் பஞ்சு தேடும்
தவிப்புடன் தினமும் தகவல்கள் சேர்ப்பேன்.
காம்பு களைந்த வார்த்தைகளாகத்
தேர்ந்து நேர்ந்து வாக்கியம் செய்வேன்.
எனக்கு நானே பலமுறை சொல்லி
உச்சரிப்பை ஒழுங்குபடுத்துவேன்.
கிளைச்சொல் எதுவும் நடுவில் முளைத்துன்னைக்
காயம் செய்யாமல் கவனமாயிருப்பேன்.
வண்ணத்துப் பூச்சியாய்ப் படபடக்கிற உன்
கண்களைப் பார்த்தே கதைகள் சொல்லுவேன்.
நெற்றி சுருங்கும் நொடியில் சுதாரித்து
மற்றொரு செய்திக்குத் தாவி விடுவேன்.
என்ற போதிலும்… ஏதோ ஒரு நாள்
நல்ல நிகழ்வுகள் ஏதுமில்லாத
விடியலொன்று வந்த சேரலாம்.
பெரிதாய்ச் சொல்ல ஒன்றுமில்லாமல்
வெறுங்கையோடு நான் வர நேரலாம்.
தகவல்களற்ற அந்த தினத்தை…
எந்த முகத்துடன் எதிர்கொள்ளப்போகிறேன்?