சிறு சிறு டீஸ்பூன் அளவுகளிலேயே
பருக வேண்டியதாய்ப் போனது வாழ்க்கை
கரைதொடும் பிரவாகம் கண்களில் பட்டால்
மிரண்டுபோகிற மனத்துடன் மனிதர்கள்.
கைகூப்பல்களில் தொடங்கும் அறிமுகம்
தோள்தொடும் நட்பாய்த் தொடருவது அபூர்வம்.
தொலைதூரம் வரை தொடர்புகள் உண்டு.
தொடும் தூரத்தில் உறவுகளில்லை.
பயன்கருதாத பரிவின் அளவுகள்
கால்குலேட்டரின் கணக்கினில் வராது!
இதயம் தொலைத்த மனிதர்களெல்லாம்
எதைத் தேடுகின்றனர் இன்டர்நெட்டில்?
அறிமுக அட்டை பரிமாற்றம்போல்
சடங்காய் மாறும் சந்திப்புகள்.
யாதும் ஊரென்ற பேதையின் ஊரில்
கேள்வரும்கூட அந்நியராயினர்.
தொடவும் பயந்து மனிதர்களெல்லாம்
தள்ளி நடப்பதில் நியாயமுள்ளது.
அன்பு மிக மிக ஆபத்தானது…
அடைத்து வைத்திருக்கம் அமிலம்போல.
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)