பழைய காலத்துப் போர்வாள் ஒன்றை
மலர்க் கூடைக்குள் மறைந்திருந்தார்கள்.
வீரன் ஒருவன் வெறி கொண்டு சுழற்ற
குருதிப்புனலில் குளித்து வந்திருக்கும்.
தேக்கு தேகங்கள் கிழித்த வாளுக்குப்
பூக்களின் ஸ்பரிசம் புதிதாயிருக்கும்.
வாள்முனையிருந்து வருகிற நெடியோ
தேனீக்களுக்குத் திகைப்பைக் கொடுக்கும்.
கூரிய முனையில் வண்டுகள் அமர்ந்தால்
கழுவேற்றங்கள் கண்முன் நடக்கும்.
மலர்க்கூடைக்குள் போர்வாள் போன
மர்மமெனக்கு விளங்கவேயில்லை.
பூக்களுக்குப் பாதுகாப்பாகவா?
களைத்த போர்வாள் கண்ணுறங்கவா?
கொடிகளிடம் போய்க் கேட்டுப் பார்த்தேன்
வருபவர், செல்பவர், விரலால் தீண்ட…
வதங்குகின்றவாம் வாச மலர்கள்.
பூக்களுக்கெல்லாம் போர்க்குணம் கிடைக்கப்
போர்வாள் நடத்தும் பயிற்சி வகுப்பாம்.
“பலே பேஷ்” என்று பாராட்டிவிட்டு
வேலையைப் பார்க்க வெளியே போனேன்.
வெண் பூக்களுக்கு வன்முறை தெரிந்தால்
வேலிகள் எதுவும் வேண்டியிராது.
விபரமில்லாமல் வண்டுகள் வந்தால்
வண்டின் குருதியைப் பூக்கள் உறிஞ்சலாம்.
கோவில் வாயிலில் கிடைக்கிற பூக்கள்
கசாப்புக் கடைகளில் விற்பனையாகலாம்.
கணவன் வாங்கிக் கொடுக்க பூக்கள்
விவாக ரத்துக்கு வழிவகுக்கலாம்.
மாலைகளோடு தொண்டர்கள் வந்தால்
மாபெரும் தலைவர்கள் மிரண்டு நடுங்கலாம்
இப்படியெல்லாம் எண்ணிக் கொண்டே
திரும்பும்போது ஞாபகமாக
மலர்க்கூடையைத் திறந்து பார்த்தேன்…
போர்வாள் முனையோ பூத்துக்கிடந்தது.
(இதற்கு முன்னால் இறைவனாயிருந்தேன்! – நூலிலிருந்து)