முன்பொரு காலத்தில் தமிழ்மொழி மீதான ஈடுபாட்டை வளர்ப்பதில் அரசியல் இயக்கங்களுக்கு பெரிய பங்கிருந்தது.
50 களிலும் 60 களிலும் தேசிய இயக்கங்களுக்கும் திராவிட இயக்கங்களுக்கும் இதில் ஒரு போட்டியே நிலவிற்று. அந்த நாட்களில் தேசிய இயக்கங்களில் இருந்து மிகச்சிலரே இலக்கியவாதிகளாகவும், மக்கள் ரசனையை ஈர்க்கக் கூடிய பேச்சாளர்களும் உருவாயினர்.
இன்றும் தேசிய இயக்கங்களின் நிலை இதுதான்.
காங்கிரஸ் இயக்கத்தின் குறிப்பிடத்தக்க பேச்சாளராகவும் கட்டுரையாளராகவும் அந்நாட்களில் விளங்கியவர் திரு.சின்ன அண்ணாமலை,ராஜாஜிக்கு நெருக்கமனவர் என்றாலும் காமராஜரின் அன்பைப் பெற்றவர்.சிவாஜி கணேசனின் சமூக வாழ்வை வடிவமைப்பதில் பெருந்துணை புரிந்தவர். காரைக்குடி அருகிலுள்ள உ.சிறுவயல் கிராமத்தைச் சேர்ந்த இவர், அசாத்தியம் என நாம் இன்று நினைக்கும் பல காரியங்களை அநாயசமாக செய்திருக்கிறார்.
இன்றைய காலகட்டத்தில் திரைப்பட நடிகர்களின் ரசிகர்களை தங்கள் அங்கமாக ஆக்கிக் கொள்ள பல அரசியல் இயக்கங்கள் திட்டமிடக் காண்கிறோம். முன்னொரு காலத்திலதரசியல் பின்புலத்துடன் வந்த திரைக்கலைஞர்களின் ரசிகர்கள் அவர்தம் இயக்கங்களின் தொண்டர்கள் ஆயினர். ஆனால் திராவிட இயக்கத்திலிருந்த திரு சிவாஜி கணேசன் தேசிய இயக்கத்திற்கு மாறிய பிறகு அவருடைய இரசிகர்களை அரசியல் தளத்தில் ஒருங்கிணைக்க திறமைமிக்க நெறியாளர் ஒருவர் தேவைப்பட்டார். அந்தப் பொறுப்பை திறம்பட நிறைவேற்றியவர் திரு.சின்ன அண்ணாமலை ஆவார்.
1967ல் காங்கிரஸ் தமிழகத்தில் தோல்வியடைந்த பிறகு 1969ல் அக்டோபர் 1ஆம் நாள் ” அகில இந்திய சிவாஜி கணேசன் ரசிகர் மன்றம்” என்னும் அமைப்பைத் தோற்றுவித்து ஏழாண்டுகள் அதன் தலைவராகவும் விளங்கினார்.
திரு.சின்ன அண்ணாமலையின் எழுத்தாற்றலும் வலிமையானது. ” சொன்னால் நம்ப மாட்டீர்கள்” என்னும் தலைப்பில் அவர் எழுதிய அனுபவக் கட்டுரைகள் வெகு சுவாரசியமானவை.சிறுகதைகளும் நாவல்களும் எழுதியுள்ளார்.
தமிழ்ப்பண்ணை என்னும் பதிப்பகத்தைத் தோற்றுவித்து நாமக்கல் கவிஞர், இராஜாஜி போன்றோர் நூல்களைப் பதிப்பித்தவர். சின்ன அண்ணாமலை என்னும் பெயர்கூட இராஜாஜியால் சூட்டப்பட்டதே ஆகும்.
கலைஞர் முதல்வராக இருந்த போது கலைஞர்,கவியரசு கண்ணதாசன்,சிவாஜி கணேசன் ஆகியோர் மத்தியில் தொல்காப்பிய மாநாடு ஒன்றில் தன்னை திடீர் தலைமையேற்க தம்மை அழைத்த அனுபவத்தை பெரும் சிரிப்பலைகள் மத்தியில் அவர் விவரித்த பாங்கு ஒலிப்பேழை வடிவில் இன்றளவும் அவருடைய அபாரமான நகைச்சுவைஉணர்வுக்கு சான்றாகத் திகழ்கிறது
1920 ஜூன் 18ல் பிறந்த இவர் 1980 ஜூன் 18 ல் தன் மணிவிழா மேடையில் மூச்சுத்திணறலால் மறைந்தார். மற்றவர்களை மகிழ்விப்பதில் மகத்தான மனிதராகத் திகழ்ந்த இவர், மனதுக்கினியவர்கள் சூழ்ந்திருக்க மாப்பிள்ளைக் கோலத்தில் மறைந்தார்.
தேசியத் தமிழராய் வாழ்ந்த திரு.சின்ன அண்ணாமலை அவர்களின் 97ஆவது பிறந்த தினமும் 37ஆவது நினைவு தினமும் இன்று…அந்த மாமனிதரை நினைவு கூர்வோம்.